தீ மித்தவர் உயிரிழந்தார்!


கொழும்பு, ஆர்மர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது இடம்பெற்ற தீமிதித்தல் நிகழ்வில் கலந்துகொண்ட 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண் காலில் தீக்காயம் ஏற்பட்டதையடுத்து  உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் கெசல்வத்த பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 10 வயது சிறுமியின் தாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (14) ஆலயத்தின் தீபத்திருவிழா இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார், அதில் கலந்துகொண்ட குறித்த பெண் தீமிதித்தல் உட்சவத்தில் கலந்துகொண்ட நிலையில், அவரது பாதங்கள் எரிந்த நிலையில் வைத்திய உதவியை நாடாத காரணத்தினால் சுகவீனமடைந்து அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (18) தனது வீட்டில் இருந்த போது திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

No comments