இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டது


இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டதனை எம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கொண்டு, பிரித்தானியத் தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியாகிய தமிழ்ப்பள்ளிகளின் கூட்டமைப்பு, தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வினை 15.01.2022 ஆம் நாள் பிற்பகல்முதல் மெய்நிகர்வழியே மிகச்சிறப்பாக நடாத்தியது. அதேநாள் இவ் அமைப்புடன் இணைந்து செயற்படும் பள்ளிகளினால் தைப்பொங்கல் நிகழ்வுகள் ஆசிரியர், மாணவர், பெற்றோர் பங்களிப்புடன் நேரிலும் நடாத்தப்பட்டன. 

பிரித்தானிய நாட்டில் தமிழரின் மொழி, பண்பாடு, கலைகளைப் பேணி அடுத்த தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்தி, அழியாமல் பாதுகாக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட இம் மெய்நிகர்வழியான நிகழ்வினை, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையும் அதன் உறுப்பினர்களான பெல்சியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, யேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், சுவிற்சர்லாந்து உட்பட பன்னிரு நாட்டுத் தமிழ்க் கல்விக்கழகங்களும் இணைந்து நிகழ்வுகளை வழங்கிச் சிறப்பித்திருந்தன. தாயகம், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பேராசியர்களும் ஐரோப்பிய நாடுகளின் தமிழறிஞர்களும் இந்நிகழ்வில் இணைந்து வாழ்த்துரைகளையும் கருத்துரைகளையும் வழங்கிச் சிறப்பித்தார்கள். மேலும், நியூசிலாந்து, அவுத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், தமிழஞர்களின் வாழ்த்துரைகளும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. 


உலகத் தமிழ்மக்களின் ஒன்றிணைவை பறைசாற்றி, மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்மரபு, தைப்பொங்கல் தொடர்பான கருத்துரைகளும் தமிழர் கலைவடிவங்களை வெளிக்கொணரும் வகையில் இளையோர்களின் பன்னாட்டுக் கலைநிகழ்வுளும் இடம்பெற்றன.

“தமிழால் இணைவோம், தமிழை உலகமெலாம் பரவும்வகை செய்வோம்” என்ற உறுதியுரைகளுடன் நிகழ்வு பிற்பகல் 7:00 மணியளவில் நிறைவு பெற்றது.


இலண்டன் சட்டசபையின் தமிழர் மரபுத் திங்கள் அறிவிப்புக்காக உழைத்த பெருமக்களைப் போற்றி, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்நிகழ்வு சிறப்புற நடைபெறுவதற்கு பேராதரவுகளையும் ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கிய கல்விக்கழகங்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments