வடக்கு ஆளுநரை புறக்கணித்த டக்ளஸ்?



வடமாகாணசபையின் புதிய ஆளுநரது அழைப்பினை மாவட்ட இணைத்தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா,அங்கயன இராமநாதன்,திலீபன் என அனைவரும் புறக்கணித்துள்ளனர். 

இணைத் தலைவர்களை வடக்கு மாகாண ஆளுநர் தனது ஆளுநர் செயலகத்திற்கு வருமாறு அழைத்தமை தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளன.

இலங்கை முழுவதும் மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பான இணைத் தலைவர்களாக ஆளும் கட்சியின் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண ஆளுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிற்கு ஆளுநரான ஜீவன் தியாகராஜாவிற்கு அறிவித்தல்கள் வழங்கப்படுகின்ற போதும் கூட்டங்களில் பங்குகொள்ளாமல் அவர் தவிர்த்து வருகின்றார்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று 13ஆம் திகதி காலை 10 மணிக்கு  மாவட்டச் செயலகத்தில் இடம்பெற முற்கூட்டியே அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சகல இணைத் தலைவர்களிற்குமான கூட்டம் ஆளுநர் செயலகத்தில் அதே  13 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறும் என்ற அறிவித்தலை ஆளுநர் வழங்கியுள்ளார்.

ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தின் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது மட்டுமன்றி ஆளுநர் அமைச்சர்களை தனது அலுவலகத்திற்கு  அழைக்கும் அதிகாரம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதேபோன்று அமைச்சர் அல்லாத இணைத்தலைவரானாலும் ஆளுநர் அலுவலகத்திற்கு அழைக்க முடியுமா என்பதும் கேள்விக்கு உட்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் கூட்டத்தை இணைத் தலைவர்கள் நேற்று புறக்கணித்துள்ளனர்.


No comments