ஒன்றுமே இல்லாத மாகாண சபைக்கு சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் போட்டி! பனங்காட்டான்

ஜி.ஜியும், எஸ்.ஜே.வியும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சுட்ட மண்ணும் சுடாத மண்ணுமாக அரசியல் செய்த அந்தக் காலம் வேறு. முட்டாள்கள்என்று முன்னைய தமிழ்த் தலைமைகளால் நாமம் சூட்டப்பட்ட சிங்களவர், ஒன்றுபட்டு தமிழர்களுக்கு அரசியல் கற்பிக்கும் இன்றைய காலம் வேறு. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உணர்ந்து வளர்காலத்தை தமிழ்த் தலைமைகள் எவ்வாறு வழிநடத்தப் போகின்றன?

மூன்று நிர்வாக அலகுகளாகவிருந்த இலங்கை இராச்சியத்தை ஒற்றை அலகாக்கிய பிரித்தானிய சாம்ராஜ்யம், அதற்குச் சுதந்திரம் என்று பெயர் சூட்டி கைவிட்டுப்போன காலம், அடுத்த வாரம் (பெப்ரவரி 4ம் திகதி) எழுபத்தைந்தாவது வருடத்தில் பாதம் பதிக்கிறது. 

சனத்தொகை எண்ணிக்கைக் கணக்கால் தங்களை பெரும்பான்மையினராக அடையாளப்படுத்தியுள்ள சிங்கள தேசியவாதிகள், மேட்டுக்குடி மேலாண்மைவாதத்துடன் மற்றைய சகல இனங்களையும் சிறுபான்மையினராக நாமம் சூட்டி தங்களை ஆள்பவர்களாகவும், மற்றையோரை ஆளப்படுபவர்களாகவும் வகைப்படுத்தி எதேச்சார ஆட்சி நடத்துகிறது. 

இதனால் இலங்கை (சிலோன்) என்பது 24 ஆண்டுகளின் பின்னர் - 1972ல் சிறிலங்கா எனப் பெயர் சூட்டப்பட்டு சோசலிச குடியரசு என்று மாறியது. இது வழிமுறையாக இப்போது சிங்கள பௌத்த தேசமாகியுள்ளது. 

74 ஆண்டுகளாக தங்கள் பிறப்புரிமைக்காக போராடி வருபவர்களான ஈழத்தமிழினம் தன்னைத் தானே வருத்திக்கொண்டு, தங்களுக்குள் பிளவுபட்டு, ஒருவரையொருவர் வசை பாடுபவர்களாகவும், தலைமை நிலைக்காக தங்களுக்குள் போராடுபவர்களாகவும் மாறியுள்ளனர். 

சகல இனங்களும் இணைந்த இலங்கைத் தேசியத்துக்காக குரல் கொடுத்து வந்த சேர். பொன். அருணாசலமே, தமிழரை சிங்களவர் ஏமாற்றுகின்றனர் என்று முதன்முதலாக கண்டறிந்த தமிழ்த் தலைவர். இவரே தமிழருக்கு தனியான ஆட்சி நிலப்பரப்புக் கேட்ட முதற்தமிழரும். 

1948க்குப் பின்னர் உருவான முதலாவது தமிழ் அரசியற் கட்சியான தமிழ் காங்கிரசின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது கேட்டார். இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலானவர்கள் தமிழரசுக் கட்சியை (இதனையே சமஷ்டி என்றும் அழைத்தனர்) உருவாக்கி, பல சாத்வீகப் போராட்டங்களை நடத்தினர். 

ஜி.ஜி.பொன்னம்பலம் ஒருகாலத்தில் ஏற்றுக்கொண்ட அமைச்சர் பதவியை குறைகூறிய தமிழரசுக் கட்சி, டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசில் தங்கள் பிரதிநிதியாக மு.திருச்செல்வத்தை அமைச்சராக்கியது. என்ன நடந்தது? தமிழர்களை அடையாளம் காணவென சிங்கள அரசால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட அடையாள அட்டையை ஏற்று வாக்களித்ததுதான் இப்பதவி பெற்றுக் கொடுத்த சாதனை. 

பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து தமிழர் கூட்டணியை உருவாக்கி, தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அதிகூடிய ஆசனங்களைக் கைப்பற்றியது அடுத்த கட்டம். 1977 பொதுத் தேர்தல் அமோக வெற்றியால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. அதனால் தனிநாடு என்பது வசதி கருதி மறக்கப்பட்டு கடைநிலை அதிகாரம்கூட இல்லாத மாவட்ட சபையே கிடைத்தது. 

தங்கள் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் மாணவர்களும் இளையோரும் உரிமைப் போரை தங்கள் கைகளில் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். போர் என்றால் போர் என்று பிரகடனம் செய்த தர்மிஸ்டர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் போர் வெறியை சந்திக்கும் தலைவிதி இளைய சமூகத்திடம் சென்றது. 

முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் உறைநிலையை அடைந்து ஆண்டுகள் பதின்மூன்று ஆயிற்று. 1987ல் இலங்கை அரசியலமைப்பில் இந்தியா திணித்த பதின்மூன்றாவது திருத்தமே 34 ஆண்டுகளைக் கடந்தும் பேசுபொருளாக உள்ளது. 

கற்பிற் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? என்று பட்டிமன்றம் நடத்திய தமிழ்ச் சமூகம், இப்போது பதின்மூன்றாவது திருத்தம் நல்லதா? கெட்டதா? என்று பட்டிமன்றம் நடத்துகிறது. 

1988 நவம்பர் 19ல், பதின்மூன்றாம் திருத்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வாகம், 1990 மார்ச் மாதத்துடன் உயிர் நீத்தது. 2006 அக்டோபர் 16ம் திகதி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. 2008 மே மாதம் 10ம் திகதி, பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டபோது அப்போது இலங்கையை ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்சவின் மக்கள் ஐக்கிய முன்னணி நிர்வாகத்தைக் கைப்பற்றியது. 

இருபத்தைந்து ஆண்டுகளாக ஆளுனர் ஆட்சியிலிருந்த வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 2013 செப்டம்பர் 21ம் திகதி இடம்பெற்றது. 38 ஆசனங்களில் 30ஐ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியதால் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலாவது முதலமைச்சர் ஆனார். 2018ல் இச்சபையின் ஆயுட்காலம் முடிந்த பின்னர் இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. மீண்டும் ஆளுனர் ஆட்சியே தொடர்கிறது.  

1977ல் தமிழர் தனிநாடு கேட்டுக் கிடைத்த மாவட்ட சபைக்கும், தமிழீழத்துக்குப் போராடிய ஈழவர் கோரிக்கையை மடக்க வழங்கப்பட்ட மாகாண சபைக்கும் சிங்கள அரசு வழங்கிய அதிகாரப் பரவல் தொடர்பான ஒற்றுமையை பின்வரும் கூற்றுகளின் ஊடாகப் பார்க்கலாம். 

1981ல் யாழ்ப்பாண மாவட்ட சபையின் முதலாவது தலைவராக (இவரே இறுதித் தலைவரும்) பதவியேற்ற தமிழரசுக் கட்சியின் முன்னாள் செனட்டரான சு.நடராஜா (பொட்டர் என பிரபலமானவர்) 1983ல் இப்பதவியை ராஜினாமா செய்தார். ஒரு மேசையும் கதிரையும் வாங்குவதற்குக்கூட அதிகாரம் இல்லாத தலைவர் பதவி என்று கூறிவிட்டே இவர் பதவி துறந்தார். 

2003ல் வடமாகாண சபையின் தலைவராகப் பதவியேற்ற சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபைக்கான சகல அதிகாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று கூறினாராயினும், தாம் இருக்கும் கதிரைக்கு ஒரு கால் இல்லை (மூன்று கால் உள்ள ஆடும் கதிரை), இதிலிருந்து நான் என்ன செய்ய முடியுமென்று சொல்லி அதிகாரம் இல்லாத தலைவர் பதவி என்பதைப் பறைசாற்றினார். 

கடந்த 74 ஆண்டுகளாக தமிழினத்துக்கு சிங்கள ஆட்சிபீடங்கள் வழங்கிய அதிகூடிய அதிகாரப் பரவலாக்கல் எவ்வளவானது என்பதை அறிய மேற்குறிப்பிட்ட இரண்டு சபைகளின் தலைவர்களது  கூற்று போதுமானது. 

இந்தப் பின்னணியில் நின்றே இப்போதைய ஆடுகளமான 13வது அரசியல் திருத்தம், மாகாண சபை நிர்வாகம், வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்ற விருப்பம், தமிழரைத் தொடர்ந்து ஒற்றையாட்சிக்குள் வைத்திருக்கவே இது உதவும் என்றவாறான கோசங்களையும்...... 

இந்தியாவின் அடிவருடிகiளாகவும், தரகர்களாகவும் செயற்படுபவர்களை அடையாளம் காட்ட வேண்டுமென்றும், தமிழர் தரப்பைக் காட்டிக் கொடுக்கும் இலங்கை அரசின் கைக்கூலிகளுக்கு இடமளிக்க வேண்டாமென்றும் தமிழர் தரப்புகள் நீயா நானா துரோகி என இலவச மகுடம் சூட்டும் அசிங்க அரசியல் 13ன் அடிச்சுவட்டில் சூடுபிடித்து வருவதையும் நோக்க வேண்டியுள்ளது. 

13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்த ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்ட கடிதம் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டு பத்து நாட்கள் ஆகிவிட்டது. இக்கடிதம் இன்னமும் இந்தியத் தூதுவரின் பொக்கட்டுக்குள்தான் இருக்கிறதா? அல்லது பிரதமர் மோடியின் மேசைக்குச் சென்றுவிட்டதா என்பது எவருக்கும் தெரியாது. ஆனால், இதையொட்டிய விடயங்கள் காற்றில் மேலெழுந்து பறக்கின்றன. 

அரசியல் தீர்வு மட்டும் தமிழ் மக்கள் பிரச்சனைகள் அல்ல, இப்போது அரசியல் தீர்வு அவசரமல்ல என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச. வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் அமைப்பில் நாட்டம் காட்டவில்லை. அபிவிருத்தியும் வாழ்வாதாரம் மட்டுமே அவர்களின் தேவைகளாக காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார் இந்தியாவிலுள்ள இலங்கையின் தூதுவர் மிலிந்த மொறகொட. 

முதலாமவர் அமெரிக்கப் பிரஜாவுரிமையையும் கொண்ட இரட்டைப் பிரஜாவுரிமைக்காரர். இரண்டாமவர், அமெரிக்காவின் மருமகன் முறையான வல்லரசின் விசுவாசி. இவர்கள் இருவரதும் குரல் எங்கிருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள நேரம் எடுக்காது. 

மறுபுறத்தில், கோதபாய கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தமும் மாகாண சபை முறைமையும் காணாமற் போய்விடும். ஒரு நாடு ஒரு சட்டம் என்பதே (சிங்கள நாடு, சிங்களச் சட்டம்) புதிய அரசியல் அமைப்பின் கருப்பொருள். இதனூடாக ஆறு தமிழ்க் கட்சிகளின் இந்தியாவுக்கான கடிதம் அம்போ ஆகிவிடும். இதனையே கோதாவிடம் சிங்கள பௌத்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை இலகுவாக கோதபாய நிறைவேற்ற, தமிழ்த் தலைவர்களின் இந்தியாவுக்கான கடிதம் உதவப் போகிறது என்ற கருத்து அரசியல் அரங்கில் வலுப்பெற்று வருகிறது. 

இதற்கும் அப்பால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான மக்கள் முன்னணியும் தமிழ்க் காங்கிரசும் பதின்மூன்று எதிர்ப்பு நடவடிக்கை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இவர்களுக்கு புதிய பரிமாணத்தை வரவாக்கியிருக்கிறது. தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இவர்களின் முன்முயற்சி சற்று வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. 

மாகாண சபை முறைமையை ஏற்கவில்லை - ஆனால் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்திருப்பது அரசியலில் ஒரு வகையான எறிகுண்டு. மாகாண சபையில் எதுவும் இல்லையென்பதை ஆறு தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் காட்டவே தேர்தலில் போட்டியிடப் போவதாக கஜேந்திரகுமார் கூறினாலும் உண்மை அதுவல்ல. இனி வரப்போகும் பொதுத்தேர்தலில் தமது அணிக்கு கூடிய ஆசனங்களைப் பெற வேண்டுமானால், மாகாண சபையில் கூட்டமைப்புக்குக் கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்கின்ற கணக்கு இப்பொழுது இவருக்குத் தெரிய வந்துள்ளது. 

மாகாண சபையை காணாமலாக்க கோதபாய அரசு திட்டமிட்டுள்ளது. காணாமற்போகவுள்ள மாகாண சபையூடாக கூட்டமைப்பை குலைக்க கஜேந்திரகுமார் திட்டமிடுகிறார். அதே மாகாணசபை முறைமையூடாக கஜேந்திரகுமார் தரப்பை அம்பலப்படுத்தும் முயற்சியில் ரெலோ அணியினர் ஈடுபட்டுள்ளனர். 

ஜி.ஜியும், எஸ்.ஜே.வியும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சுட்ட மண்ணும் சுடாத மண்ணுமாக அரசியல் செய்த அந்தக் காலம் வேறு. முட்டாள்கள் என்று முன்னைய தமிழ்த் தலைமைகளால் நாமம் சூட்டப்பட்ட சிங்களவர், ஒன்றுபட்டு தமிழர்களுக்கு அரசியல் கற்பிக்கும் இன்றைய காலம் வேறு. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் உணர்ந்து வளர்காலத்தை தமிழ்த் தலைமைகள் எவ்வாறு வழிநடத்தப் போகின்றன?

கிழிச்சது போதும் - போங்கள்| என தமிழ் மக்கள் இவர்களுக்குப் பாடம் புகட்டக்கூடிய ஒரு காலம் வருமா?

No comments