தாதியர் சபை தேர்தலும் தமிழர்களின் எதிர்காலமும் - மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்


கடந்த 11ம் திகதி நாடளாவிய ரீதியில் 37000 தாதியரை பிரதிநிதித்துவப்படுத்தி 33 நிலையங்களில் இடம் பெற்ற தாதியர் சபைத் தேர்தலை  இந்த நாட்டிலுள்ள மக்களின் எதிர்கால வாக்களிக்கும் போக்கை முன்கூட்டியே  காட்டும் ஒரு முக்கியமான தேர்தலாக எடுத்துக் கொள்ள முடியும்.

இந்த தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு திருப்புமுனையை தென்பகுதி வாக்காளர்கள் மத்தியில் காட்டி நிற்கிறது. அதாவது ஜேவிபி  கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை தாதியர் சங்கம் முதல் தடவையாக அறுதிப் பெரும்பான்மையாக  66% வாக்குகளை பெற்றுள்ளது. அதேவேளை அரசாங்கத்தின் கையாளான முத்தெட்டுகம தேரரின் தாதியர் சங்கம் 17% வாக்குகளை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் விசுவாசியான சமன் ரத்னபிரியவின் சங்கம்  16% வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள்  அதிகரித்த விலைவாசி , வீழ்ந்து வரும் பொருளாதாரம் , அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு , ஊழல் போன்ற பல்வேறு காரணங்களினால் ஆளும் கட்சி மீது வெறுப்புற்று இருக்கும் மக்களின் மனோநிலையை பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதேவேளை கடந்த காலத்தில் பலமான  எதிர்க்கட்சியாக இருந்த  ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள தயாராக இல்லை என்பதை அவர்களுக்கு சார்பான சங்கத்துக்கு அதிகரிக்காத வாக்குகள் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ள முடியும் . 

கடந்த காலத்தில் ஒரு ஆயுதக் குழுவாகவும் தீண்டத்தகாதவர்களாகவும்  தென்பகுதி மக்களால் கருதப்பட்ட  ஜேவிபி  கட்சிக்கு சடுதியாக அதிகரித்துள்ள வாக்குகள் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க மக்கள் தயாராகி விட்டதைக்  காட்டுகிறது. இந்த மாற்றம் அரசாங்கத்தின் கையாட்களாக செயல்பட்டு வரும் அரச மருத்துவ சங்க வைத்தியர் பாதெனிய குழுவினர் உட்பட்ட  ஏனைய அரச சார்பு  தொழிற்சங்கங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. ஆனால் தமிழர்களின் எதிர்கால இருப்பில் இந்த தென்பகுதி வாக்காளரிடம் ஏற்பட்ட  மாற்றம் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும். 

கடந்த காலத்தில்  ஜேவிபி  கட்சி சிறுபான்மை தமிழர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஒரு போதுமே ஆதரிக்கவில்லை. மேலும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை அரசாங்கங்களின் தொடர்ச்சியான  முயற்சிகளையும் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்திருக்கிறது. இதை 1966 பண்டா -செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான ஊர்வலம், 1987 இல் மாகாணசபைக்கு எதிரான போராட்டம், தொண்ணுறுகளில் ரணில் நோர்வே ஊடாக மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டது, 2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் சமஸ்டி தீர்வுக்கு எதிரான அறைகூவலுக்கு ஆதரவளித்தது இந்திய இலங்கை ஒப்பபந்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு  மாகாணங்களை பிரிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 2006 ம் ஆண்டில் அவற்றினைப் பிரிக்கும் தீர்ப்பினைப் பெற்றதன் ஊடாக தமிர்களது வரலாற்றுத் தாயக உரிமைகோரலுக்கு எதிராக செயற்பட்டது போன்ற ஜேவிபி  கட்சியின் செயற்பாடுகளின் ஊடாக அவதானிக்கலாம். விமல் வீரவன்ச போன்ற கடும்போக்காளர்கள்   ஜேவிபி  கட்சியில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர் அனுரா திஸாநாயக்க முதல் தடவையாக தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதன் அவசியம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்து இருந்த போதிலும் இன்று வரை  அனுரா திஸாநாயக்க மற்றும் சந்திரசேகரன் போன்ற  ஜேவிபி தலைவர்கள் இனப்பிரச்சினை தொடர்பான தமது தெளிவான  நிலைப்பாட்டையே அல்லது சாத்தியமான தீர்வு திட்டங்கள் எதையும் வெளிப்படுத்தவில்லை.  

ஆயினும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தென்பகுதி வாக்குகள் குறைந்தது 3 கூறுகளாக அல்லது சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி தனியாக தேர்தலை எதிர்கொள்ள முனைந்தால் 4 கூறுகளாக பிரியும் நிலை காணப்படும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அமைப்பதில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். அதனால்  ஜேவிபி  கட்சி கடந்த காலத்தை போலல்லாது சிறுபான்மையினருக்கு கணிசமான அதிகாரப் பகிர்வை வழங்க முன்வரக் கூடும். அதேவேளை தனது எதிர்கால இருப்பை தக்க வைப்பதற்கு ஜேவிபி  கட்சி ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க முயலும் போது பணத்தைப் பெற்றுக் கொண்டு மனச்சாட்சிப்படி அரசாங்கத்துக்கு வாக்களித்து வரும் முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எலும்புத் துண்டுகளுக்காக அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் கட்சி உறுப்பினர்கள் சங்கடத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம். இவ்வாறான நிலைகளை முன்கூட்டியே கணித்து தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் முதலில் தமக்குள் ஒற்றுமையான ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி ஒன்றுபட்ட குரலில் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பார்களா? 

18.12.2021

No comments