ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா அரச தரப்புடன் சந்திப்பு


இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர், நீதியமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரியும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா இலங்கைக்கான 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்தார்.இலங்கைக்கான விஜயத்தின் மூன்றாவது நாளான நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர், நீதியமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனும் இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்களுடனும் அவர் சந்திப்புக்களில் ஈடுபட்டார்.

அதன்படி நோர்வே, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நேற்றுக்காலை சந்தித்த கன்னி விக்னராஜா, இலங்கையின் அபிவிருத்திக்கு அந்நாடுகளால் வழங்கப்படும் வலுவான பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கு நன்றியையும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து நீதியமைச்சர் அலிசப்ரி மற்றும் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்னே ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய ஐ.நா உதவி பொதுச்செயலாளர், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான செயற்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரம் மற்றும் நீதித்துறை உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புக்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

மேலும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடனான சந்திப்பின்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சிற்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்திற்கும் இடையில் சுமார் 55 வருடகாலத்தொடர்பு பேணப்பட்டு வருகின்றமையை ஐ.நா பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா நினைவுகூர்ந்தார். 


அதுமாத்திரமன்றி இருதரப்பு நல்லுறவை மேலும் மேம்படுத்துதல், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவியுடன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதன்போது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கைப் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கத்தயாராக இருப்பதாக சபாநாயகரிடம் உறுதியளித்த கன்னி விக்னராஜா, அரசியலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒன்பதாவது பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நகர்வுகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments