பங்களாதேஷில் படகில் தீ விபத்து! 37 பேர் பலி! 72 பேர் காயம்!


தெற்கு பங்களாதேஷில் உள்ள ஒரு நதியில் பயணித்துக்கொண்டிருந்த படகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பாரிய தீயில் குறைந்தது 37 பேர் இறந்தனர். மேலும் 72 பேர் காயமடைந்தனர். பயணிகள் கப்பலில் இருந்து குதித்து கரைக்கு நீந்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜலோகாட்டி மாவட்டத்தின் சுகந்தா நதிக்கரையில் எம்.வி அவிஜன் - 10 (MV Avijan-10) என்ற படகில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தலைநகர் டாக்காவிலிருந்து தெற்கே 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்குனாவுக்கு 800 பயணிகளை ஏற்றிச் சென்றது.

தீயணைப்பு அதிகாரி ஃபஸ்லுல் ஹக் கூறுகையில், மீட்புப் படையினர் இதுவரை 37 உடல்களை மீட்டுள்ளனர் மற்றும் 72 காயமடைந்த பயணிகளை மீட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

சுமார் 130 ஆறுகளைக் கடந்து செல்லும் பங்களாதேஷில் படகு விபத்துக்கள் பொதுவானவை மற்றும் பெரும்பாலும் கூட்ட நெரிசல் மற்றும் தளர்வான விதிகளால் இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்படுகின்றன. குறிப்பாக பங்களாதேசின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் படகுகள் ஒரு முன்னணி போக்குவரத்து வழிமுறையாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் டாக்காவுக்கு வெளியே படகு ஒன்று மற்றொரு கப்பலுடன் மோதி கவிழ்ந்ததில் 25 பேர் இறந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments