சாப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வாம்!



இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரிசி, சீனி உட்பட அத்தியாவசிய பொருட்களை பிராந்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக மத்திய வங்கியிடமிருந்து 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கான போதியளவு உரமின்மை காரணமாக விளைச்சல்கள் குறைவடையக்கூடும். இதனால் உணவு நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற ஊடகமொன்றின் கேள்விக்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன, மியன்மாரிலிருந்து அரிசியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து தனியார் துறையினர் மூலம் சில வகை உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியுமா என ஆராய்வதற்காக அடுத்த மாதம் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் பாகிஸ் தானிலிருந்து பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி என்னை கேட்டுக்கொண்டுள்ளார் என பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ட்விட்டர் பதிவொன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை 2021 ஆம் ஆண்டின் நிறைவு வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments