கௌதாரிமுனை சொல்லும் கதை!பூநகரி கௌதாரிமுனை ஆலய மீளுருவாக்கப்பணிகள் சொல்லும் தகவல்களை பதிந்துள்ளார் பேராசிரியர் புஸ்பரட்ணம்.

பூநகரி ஆலடி என்ற இடத்தில் இருந்து வடக்கே கல்முனைவரை ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் நீளமும்,  மூன்று கிலோ மீற்றருக்கு குறைவான  அகலமும் கொண்ட ஒடுங்கிய மணற்பாங்கான பிராந்தியத்தில் பரமன்கிராய்,  கௌதாரிமுனை, வெட்டுக்காடு, வினாசியோடை,. மண்ணித்தலை, கல்முனை முதலான பழம்பெரும் கிராமங்கள் காணப்படுகின்றன. 

இப்பிராந்தியம் கற்காலம் தொட்டு ஐரோப்பியர் காலம்வரை அயல்நாடுகளுடன் கடல்சார் தொடர்புகளைக் கொண்டிருந்ததை  உறுதிப்படுத்தும்  பல்வேறு காலகட்டத்திற்குரிய பலதரப்பட்ட நம்பகரமான தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாதாரங்களைத் தற்காலத்திலும் தொல்லியல் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்க முடிகின்றது. 

ஆயினும் 1990 களில் இருந்து இக்கிராமங்களில்  தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்ட போது அங்கு அப்படை வசதிகள் கூடக்காணப்படாத நிலையில்  குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களே வாழ்ந்து வந்துள்ளதைக் காணமுடிந்தது.அக்காலப்பகுதியில்  கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட மக்களின்  குடியிருப்புகள் எவற்றையும் எம்மால் அடையாளம் காணமுடியவில்லை. இந்நிலையிலும்  கல்முனை, மண்ணித்தலை, கௌதாரிமுனை ஆகிய கிராமங்களில் பெருமளவு அழிவடைந்த இந்து, கிறிஸ்தவ ஆலயங்களையும் கடற்கரையோரங்களில் இருந்த சிறிய கிராமிய வழிபாட்டு ஆலயங்களின் அழிபாடுகளையும் அடையாளம் காணமுடிந்தது. இவ்வாலய அழிபாடுகளை ஆதாரங்களாகக் கொண்டு முன்பொருகாலத்தில் இக்கிராமங்களில் செறிவான மக்கள் குடியிருப்புக்களும், வளமான பண்பாட்டு அம்சங்களும்  நிலைத்திருக்கலாம் எனக் கருதமுடிகின்றது. அந்த உண்மையை அடையாளப்படுத்திக் காட்டிய பழம் பெரும் இந்து ஆலயங்களில் ஒன்றாகத்  தற்போது மீளுருவாக்கப்பட்டு வரும் கௌதாரிமுனை விநாயகர் ஆலயம் காணப்படுகின்றது. 

அழிவடைந்த இவ்வாலயக் கட்டமைப்பில் கற்பக்கிருகம், அந்தராளம், முன்மண்டபம், பலிபீடம், கொடிக்கம்பம், கர்ப்பக்கிரகத்துடன் இணைந்த கோமுகி, அதற்கு  அருகில் சிறிய கேணி கொடிக்கம்பத்திற்கு சற்றுத் தொலைவில் மேற்கே கலைவேலைப்படுகள் கொண்ட துணைக்கோயில் என்பவற்றைக் கொண்டுள்ளன. இவ்வாலய கர்ப்பக்கிகத்தின் மேலமைந்த சிறிய விமானம் தேர்போன்ற வடிவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் பல நூற்றாண்டுகளுக்கு மேல் மக்களால் வழிபடப்படாதிருந்ததால் ஆலயத்தின் உட்பகுதியிலும், அதன் வெளிப்பகுதிலும் பெரிய ஆலைமரங்களும், பனை மரங்களும், பற்றைக்காடுகளும் வளர்ந்திருந்தன. விமானத்தைப் பெருமளவு மூடியநிலையில் ஆலமர வேர்கள் படர்ந்திருந்தன. ஆலயச் சுற்றாடலில் அடர்ந்த பற்றைக்காடுகளும், பெரும் மரங்களும் காணப்பட்டதுடன் கொடிய விசப்பாம்புகளும் குடியிருந்த இடமாக இவ்வாலயம் காணப்பட்டதால் மக்கள் இவ்விடம் செல்வதைத் தவிர்த்து வந்துள்ளனர். 

ஆயினும் இவ்வாலத்தின் பழமை கருதி  2010 ஆண்டின் பின்னர் இந்துக்கலாசாரத் திணைக்களம், பூநகரி பிரதேச செயலகம், பூநகரியில் முகாமிட்டிருந்த பாதுகாப்புபடையினர், பொது மக்கள் ஆகியோர் எடுத்த கடும் முயற்சியால் ஆலயமும், ஆலயச் சுற்றாடலும்; ஓரளவுக்கு துப்பரவுசெய்யப்பட்டு  அச்சமற்ற நிலையில் மக்கள் இவ்வாலயத்தை பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டது.

2012 ஆம் ஆண்டு இவ்வாலயத்தைப் பார்வையிட்ட தொல்லியற் திணைக்கள பணிப்பாளர் நாயகமும், அவருடன் வந்த அதிகாரிகளும் இவ்வாலய அழிபாடுகளின் பழமையையும், தனித்துவமான கலைமரபையும் கருத்தில் கொண்டு இதையொரு தேசிய மரபுரிமைச் சின்னமாகப் பிரகடனப்படுத்தினர். 

இவற்றின் அடிப்படையில் தற்போது தேசிய மரபுரிமை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இம்மீளுருவாக்கப் பணிகள் யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான திரு.பா.கபிலன், திரு.வி. மணிமாறன், திரு.எஸ்.கைலைவாசன், திரு.க.கோகிலபவன், திருமதி. நித்தியா ஆகியோரின் மேற்பார்வையிலும், நெறிப்படுத்தலிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

இப்பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொல்லியல் இறுதிவருட மாணவர்களும், ஆசிரியர்களும்  இணைந்து ஆலய புனரமைப்பிற்கு முன்னோடியாக ஆலயத்தின் உட்பகுதிகளிலும், ஆலயத்தின் வெளிப்பகுதிகளிலும் மாதிரி அகழ்வாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அகழ்வாய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட அத்திவாரங்கள், தூண்கள் நாட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடைகள், தெய்வச் சிலைகளின் பீடங்கள் என்பனவும்  இதுவரை தெரியாதிருந்த புதிய உண்மைகளாகும்.  

இவ்வகழ்வாய்விலிருந்து இவ்வாலயம் தோன்றிய தொடக்க காலத்தில் இவ்வாலயக்கட்டமைப்பில் கருப்பக்கிருகம், அதன்மேல் சிறிய விமானம், கர்ப்பக்கிருகத்திற்கு முன்னால் சிறிய அந்தராளம், அதன் தொடர்ச்சியாகத்   தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட முன் மண்டபம் என்பவற்றை மட்டுமே கொண்டிருந்ததென்பது தெரியவந்துள்ளது. இப்புனரமைப்புப் பணிகளை நெறிப்படுத்தும் ஆய்வு உத்தியோகத்தரின் கடும் முயற்சியால் இதுவரை பார்க்கப்டடாதிருந்த கர்ப்பக்கிரகத்தைத் தற்போது அச்சமின்றிச் சென்றுபார்க்கக் கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.  மேலோட்டமாக இவ்வாலய கரப்;பக்கிரகம், அந்தராளம் என்பவற்றின் கூரைகள் பார்ப்பவர்களுக்கு அவை மலையைக் குடைந்து அமைக்கப்பட்டது போல் தோற்றமளித்தாலும் அவை சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  கற்களால்  வடிவமைக்கப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியவந்துள்ளது. தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட முன்மண்டபத்தின் கூரையும், அதன் வடிவமும் எவ்வாறு இருந்ததென்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தூண்களுக்கு வெளியே கட்டப்பட்ட சுவர்களும், முன்மண்டபத்தின்;முகப்புப் பகுதியும் சற்றுப் பிற்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை என்பதை அவற்றின் வடிவமைப்பு, கலைமரபு, கட்டிட மூலப்பொருட்கள் என்வற்றை ஆதாதரங்களாகக் கொண்டு திரு.பா.கபிலன், திரு.வி. மணிமாறன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகச் சுவர்கள், அவற்றிலுள்ள தேவகோஸ்டங்கள், தூண்கள், விமானத்தில் வரும் கர்ணக்கூடுகள், கும்மட்டம், தூபி, விமானந்தாங்கி பொம்மைகள், புடைப்புச் சிற்பங்கள் என்பன அழிவடையாது இருப்பதற்கு காலத்திற்கு காலம் வேறுபட்ட மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தற்போது எமக்குத் தெரியவந்துள்ளது. 1990 களில் நாம் வரையறை செய்த ஆலய அமைப்பின் எல்லைகள் எமது தொல்லியல் மாணவர்களின் அகழ்வாய்வால் விரிவடைந்து செல்வதைக் காணமுடிகின்றது. இவர்கள் அடையாளம் கண்டுள்ள மண்ணுக்குள் புதையுண்டிருக்கும் ஆலய அத்திவாரங்கள் தொடர்ந்து அகழ்வாய்வு செய்யப்பட்டால் அவை துணைக்கோயில் வரையும், சிலவேளைகளில் சுற்றுமதிலை அடையாளம் காணும் வரை  தொடரலாம் போல் தெரிகின்றன.  இப்புதிய கண்டுபிடிப்புக்களில் இருந்து தொன்மையான காலத்தில் தோன்றிய இவ்வாலயத்துடன் காலப்போக்கில் மேலும் சில புதிய ஆலயக்கட்டுமானங்கள் தோன்றியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. அந்த உண்மையை ஆலயச்சுற்றாடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகள் மேலும் உறுதிசெய்யலாம் எனவும் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.


No comments