இறக்கை கட்டி ஆகாயத்தில் பறக்கிறது எரிபொருள்!




இலங்கையில்  எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பஸ் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை எட்டுவதற்கு இன்று பிற்பகல் சந்திப்பு   இடம்பெறவுள்ளது.

மேலும், அண்மையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது நாடு எதிர்கொண்ட நிலைமையை கருத்திற் கொண்டு பஸ் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கையில்  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 177 ரூபாயாகும்.

அத்துடன்,  95 ரக ஒக்டேன் பெட்ரோல்  லீற்றரின் விலை 184  ரூபாவிலிருந்து 23 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை  207 ரூபாயாகும்.

அதேநேரம், ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிரிக்கப்பட்டுள்ளதுடன்,  அதன் விலை 111 ரூபாயிலிருந்து 121 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

சுப்பர் டீசல் லீற்றர் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,  144 ரூபாவாக இருந்த நிலையில் அதன் புதிய விலை 159 ரூபாவாகும்.

இதேவேளை, 77 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 87 ரூபாயாகும்

No comments