கப்பலேறும் மானம்:பிரச்சினையில்லை கப்ரால்!


இலங்கைப்பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கும் நாட்டில் பண கையிருப்பு இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை எதிர்க்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை சுதந்திரமாக நிர்ணயம் செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள  அரிசி வர்த்தகர் ஒருவரின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மக்கள் வங்கிக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனாதொற்று காரணமாக அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ள வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி சுற்றுநிரூபம் வௌியிட்டுள்ள நிலையில், அந்த சுற்றுநிரூபத்தை மீறும் வகையில், சொத்துக்களை எதிர்வரும் 30 ஆம் திகதி ஏலத்தில் விடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதம நீதவான் அருண அளுத்கே, பிரதிவாதியான மக்கள் வங்கி சார்பில் ஜனவரி 4 ஆம் திகதி மன்றில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ள நிலையில், அதனை பொருட்படுத்தாது சொத்துக்களை ஏலத்தில் விற்பதற்கு மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்ததன் மூலம் மனுதாரருக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments