புதிய அரசியலமைப்பில் மாகாண சபையை நீக்க கோதா ஆட்சி திட்டம்! பனங்காட்டான்


புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவர கோதபாய ஆட்சித்தரப்பு விரும்புவதன் முக்கிய காரணம் மாகாண சபைகள் முறைமையை ரத்துச் செய்வதே. இந்த விடயத்தில் இந்திய அரசு இலங்கையின் கூட்டாளியாகச் செயற்படுகிறது. ஆனால், 13வது திருத்தத்தை முழுமையாக எதிர்பார்த்து இந்தியாவை முழுமையாக நம்பும் தமிழ்க் கட்சிகள் தமக்குள் பிளவுபடுகின்றன. இதையே இந்தியாவும் அதன் அணிசேர் நாடுகளும் விரும்புகின்றன. 

சிங்கள தேச ஆட்சியாளர்களைப் பொறுத்தளவில் இந்த மாதம் (நவம்பர்) அவர்களுக்கு முக்கியமானது. அண்ணன் தம்பி என இருவர் கூட்டாகக் கொண்டாடும் மாதம் இது. 

நவம்பர் 18ம் திகதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள். 2019ம் ஆண்டு இதே திகதியில் தான் அரசியல்வாதியல்லாத கோதபாய ராஜபக்ச ராணுவக் கோலுடன் ஜனாதிபதியாக பதவியேற்றார். 

2004ல் முதன்முறையாகப் பிரதமராகி முழுமையாக ஐந்து ஆண்டுகள் அப்பதவியை வகித்த பின்னர், 2018 அக்டோபரிலிருந்து டிசம்பர்வரை ஐம்பத்தாறு நாட்கள் மீண்டும் மரியாதையற்ற பிரதமர் கதிரையில் ஏற்றி இறக்கப்பட்ட மகிந்த, மூன்றாவது தடவையாக பிரதமரானது நவம்பர் 21ம் திகதி. இப்பதவி கோதபாய தமது தமையனாருக்கு வழங்கிய ஆறுதல் பரிசு. 

இதனை எழுதும் வேளையில் இது தொடர்பான தகவலொன்று கொழும்பும் பத்திரிகையில் வந்துள்ளது. பல்வேறு உடல் உபாதைகளுடனும் அரசியல் அஜீரணங்களுடனும் அவதிப்படும் மகிந்த அடுத்த மூன்று மாதத்துள் அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அச்செய்தி தெரிவிக்கிறது. 

கோதபாய பதவியேற்பின் இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள ருவன்வெலிசாயவிலுள்ள எட்டுத் தளங்களுக்கு மேலதிகமாக, பௌத்த பீடாதிபதிகளின் எதிர்ப்பையும் மீறி திறந்து வைக்கப்பட்ட ஒன்பதாவது தளத்தின் சாபமே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பப் போவதாக சில சிங்கள இணையத் தளங்கள் எழுதியுள்ளன. 

இதே சாபம் கோதபாயவுக்கும் இருப்பது போன்று கொழும்பில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரச எதிர்ப்பப் பேரணி காட்சி கொடுத்தது. தம்மை சிங்கள பௌத்தர்களே ஆட்சிக்குக் கொண்டு வந்தார்களென்று மார்பு தட்டிய கோதபாயவின் முதுகில் பிடித்து அவர்களே தள்ளி வீழ்த்தும் வகையில் மக்கள் எதிரணி தென்பட்டதென்று ஊடகங்கள் சுட்டியுள்ளன. 

இவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்றாண்டுகள் இருக்கிறது. ஆனால், நெருக்கடி கூடுமானால், பங்காளிக் கட்சிகள் காலை வாருவார்களென்றால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வீதிகளில் அணிவகுப்பார்களென்றால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ராணுவ ஆட்சியை அமலாக்க கோதபாய தயங்கமாட்டார். 

இப்போது அங்கு இடம்பெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து அண்மையில் கருத்துத் தெரிவித்த கோதபாய தமக்கேயுரிய பாணியில் பின்வருமாறு குறிப்பிட்டார்: - நான் நினைத்தால் விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து அவர்களைத் தோட்டத்தில் இறக்குவேன். ராணுவ ஆட்சியையும் என்னால் கொண்டுவர முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்பது அவரது கூற்றின் பொழிப்பு.

இக்கூற்றில் கவனிக்க வேண்டிய ஒரு வசனம் - நினைத்தால் ராணுவ ஆட்சியை கொண்டுவர முடியும் என்பது. இதனை விளக்குவதற்கு 1983ல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழர் உரிமைப் போராட்டம் குறித்துத் தெரிவித்த ஒரு கூற்றினை இங்கு ஒப்பிட வேண்டும். 

தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் ஏவி விடப்பட்ட முக்கிய ஆரம்ப காலம் அது. தமிழர் மீது எதனையும் செய்யலாம் என்ற போக்கில் ராணுவத் தளபதியாகவிருந்த தமது மருமகனை யாழ்ப்பாணம் அனுப்பி மூன்று மாதத்துள் பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு ஜே.ஆர். உத்தரவிட்டிருந்தார். 

மாமனாரின் உத்தரவை சிரம் மேல் தாங்கி யாழ்ப்பாணம் சென்ற மருமகன் திஸ்ஸ (புள்) வீரதுங்க தமிழ் இளைஞரை சந்திகள் தோறும் சுட்டுத்தள்ளினார். சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட மனித உரிமை அமைப்புகள் இதனைப் பகிரங்கமாகக் கண்டித்தன. 

அவ்வேளை ஜே.ஆர். கூறியது இதுதான்: - பயங்கரவாதத்தை ஒழிப்பதையே எனது ராணுவம் செய்கிறது. தமிழரை எனது அரசு படுகொலை செய்யவில்லை. நான் நினைத்தால் தமிழரை ஒழித்துக்கட்ட என்னால் முடியும். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை - இதுவே ஜே.ஆரின் கூற்று. 

நினைக்காதவரை நல்லது. ஆனால், ஜே.ஆர். அதனை நினைத்தபோது என்ன நடந்தது? 1983 இனப்படுகொலை இதற்கான வரலாற்றுச் சாட்சி. ஜே.ஆர் நினைத்ததுபோல் ஜி.ஆர் (கோதபாய ராஜபக்ச) நினைப்பார் என்றால் என்ன நடைபெறும்? வெள்ளை வான் கடத்தல்கள், குண்டு வீச்சுகள், படுகொலைகள் சர்வசாதாரணமாக இடம்பெறும். இதுதான் ராணுவ ஆட்சி. 

தெற்கில் அகமும் புறமும் இணைந்த சூழல் இவ்வாறாக இருக்கையில், தமிழர் தரப்பின் செயற்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு போகிறது. 

தமிழரசுக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், இக்கட்சியால் தெரிந்தெடுக்கப்பட்ட இரண்டு சட்டவாளர்களையும் கொண்ட குழு, தங்களுடன் இணைந்து செயற்படும் புகலிடங்களிலுள்ள சிலரையும் இணைத்துக் கொண்டு அமெரிக்காவில் இந்த வாரம் பேச்சு நடத்தியது. இக்குழுவுக்கு ஆரம்பத்தில் சட்டவாளர் குழு என பெயர் கூறப்பட்டது. ஆனால், இப்போது போனவர்கள் பலர் சட்டவாளர்கள் அல்ல, கட்சி ஆதரவாளர்களே. 

2011ம் ஆண்டில் கூட்டமைப்புக் குழு அமெரிக்கா சென்றபோது வழங்கப்பட்ட முக்கியத்துவத்தை இம்முறை ஏனோ ஊடகங்கள் வழங்கவில்லை. கூட்டமைப்பு பிளவுண்ட நிலையில், அதிலுள்ள தமிழரசுக் கட்சி தனித்து தனது ஆதரவாளர்களையும் இணைத்துக் கொண்டு சென்றது ஒரு காரணமாக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இயங்கிய உலகத்தமிழர் பேரவையின் உறுப்பினர் இதில் பங்கேற்றதும் இன்னொரு காரணமாக இருக்கலாம். 

திம்பு பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் சட்டவாளர் கே.வி.தவராஜா ஆகியோரை இக்குழுவில் இணைத்திருக்கலாமென்ற ஆதங்கம் பொதுவெளியில் உள்ளது. 

இந்தச் சூழ்நிலையில், தற்செயலான நிகழ்வா அல்லது திட்டமிட்ட நிகழ்வா என்று கூறமுடியாதவாறு ரெலோவின் குழுவொன்றை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹோல்ரன் சந்தித்து உரையாடியுள்ளார். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தனையும் சுமந்திரனையும் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்த இவர், தமிழர் தரப்பினரை தனித்தனியாக சந்திக்கும் நிகழ்ச்சி நிரலில் ரெலோவினரை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. 

கூட்டமைப்புக்குள் இன்னொரு கிளைக் கூட்டமைப்பாக அல்லது கூட்டமைப்பு - 2 ஆக ரெலோ ஆகிவிட்டதா அல்லது ஆக்கப்படுகின்றதா என்று நோக்கக்கூடிய நிலையில் இவ்வாறான காரியங்கள் இடம்பெறுகின்றன. கட்சிகள், கூட்டுகள் எத்தனையானாலும் புதிய அரசியலமைப்பில் தமிழரின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13வது திருத்த நிறைவேற்றம், வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை முழுமையாக செயற்படுத்துவது என்பதுவே அனைவரதும் பேச்சுக் கருப்பொருளாக உள்ளது. 

தமிழர் தரப்புகளுடன் பேசவும், இலங்கை அரசுடன் பேச்சுகளை தொடரவும் உலக நாடுகளுக்குத் திறந்திருக்கும் ஒரேயொரு கதவு 13வது திருத்தமும் மாகாண சபையுமே. ஆனால், இவ்விடயத்தில் இலங்கை இன்னும் மதில்மேல் பூனையாகவே இருக்கிறது. மகிந்தவின் முன்னைய ஆட்சியின்போது ஜே.வி.பி. தொடுத்த வழக்கின் அடிப்படையில், திருத்தப்படக்கூடிய சட்டப்பிரிவொன்றைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் இரண்டாக்கி தனித்தனி மாகாண சபைகளாக்கிவிட்டது. 

காணி நிர்வாகம், காவற்துறை நிர்வாகம் ஒருபோதுமே கிடையாது என்று 30 வருடங்களாக ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் அறிவித்து விட்டன. இது போதாதென்று தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் தமிழரின் பூர்வீக நிலங்கள் சிங்கள மயமாக்கப்படுகின்றன. 

இவைகளைப் பார்த்து வாளாவிருக்கும் இந்தியத் தரப்பு மாகாண சபையை முழுமையான அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவதே தங்களின் நிலைப்பாடு என்று கூறுவதை எவ்வாறு நம்ப முடியும்? 

தமிழர் தரப்பு ஒன்றுபட்டு ஒரு குரலில் நின்றால் மட்டுமே உரிமைகளைப் பெற முடியுமென்று நுனி நாக்கால் ஆலோசனை கூறும் இந்தியாவும் அதன் அணிசேர் நாடுகளும், செயற்பாட்டில் அவ்வாறு இயங்காது தமிழர் தரப்பினரை தனித்தனியாக சந்திப்பதால் எவ்வாறு ஒற்றுமை ஏற்படும்?

போதாக்குறைக்கு, கூட்டமைப்பு இரண்டாகி வருவது போன்று, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் இரண்டாக்க முனைவதை தமிழ் ஊடகங்கள் விபரமாக தெரிவிக்கின்றன. இவையெல்லாம் மாகாண சபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற காதலால்தான். 

புதிய அரசியலமைப்பொன்று வருமானால் அதில் மாகாண சபை முறைமை இல்லாமல் போகும் அபாயமுண்டு. இது இந்தியாவுக்கு நன்கு தெரியும். கூட்டமைப்பின் சம்பந்தனுக்கும் தெரியும். இவ்விடயத்திலாவது தமிழர் நிலைமையைப் புரிந்து இணைந்தியங்கும் சாத்தியம் எவரிடமும் இல்லை. 

நல்லாட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மறந்தும் முழுமையான இலங்கையின் விவகாரங்களில் சம்பந்தப்படாத சம்பந்தன், இப்போது நாட்டில் இனி என்ன நடைபெறப் போகிறதென எதிர்வு கூற முடியாதிருப்பதாக கரிசனை மிகுந்த கவலையுடன் கருத்து வெளியிட்டுள்ளார். 

தமிழ்த் தேசியத்துக்கும், தமிழர் பூர்வீக நிலத்துக்கும், மாகாண சபைக்கும் என்ன நடந்தாலும் என்ன, தமிழர் தரப்பு எத்தனை கூறுகளாகப் பிரிந்தாலும் என்ன என்றிருக்கும் சம்பந்தனின் போக்கு பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு தினசரி தனது அப்புக்குட்டி அண்ணை டவுட் என்னும் தலைப்பிலான கருத்துச் சித்திரத்தில் தெரிவித்துள்ள பின்வரும் வாக்கியத்துடன் இப்பத்தியை நிறைவு செய்வது பொருத்தமானது. 

சம்பந்தன்: ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே கோதபாய தலைமையிலான அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகின்றது. 

அப்புக்குட்டி அண்ணை: யார் ஆட்சியில் இருந்தால் நமக்கென்ன ஐயா. அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு எப்படி வெல்லுறது எண்ட வழியைப் பாருங்கோ. அதுசரி, ஆட்சியை மாற்றுகிற அலுவலுக்காகத்தான் உங்கட தளபதி அமெரிக்கா போயிருக்கிறார் எண்டதைத்தானே சொல்ல வாறியள். 

No comments