சீமான் பேச்சால் இணையத்தில் பெருகும் ஆதரவு!

 


விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வரும் வருமானத்தை நிறுத்தக்கோரி சீமான் பேசுவதாக மட்டுமே பலரும் கண்டங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதே ஏழை எளிய மக்களுக்கு வருமானத்துடன் விவசாயத்தையும் மேம்படுத்தவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியிருப்பதையும் கவனிக்க வேண்டியதாக உள்ளதுவேறு

இதுகுறித்து சீமான் பேசியதாவது, விவசாயத்தை வாழ வைக்கணும் என்றால் நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும். ஒரு மனித ஆற்றலை, திறனை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியை பெருக்கி,லாபத்தை ஈட்டுகிற நாடுதான் வாழும், வளரும். ஆனால், மனித திறனை உழைப்பில் இருந்து வெளியேற்றிவிட்டு சோம்பி இருக்கவைத்துவிட்டு அவனுக்கு கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தானது. நூறு நாள் வேலை திட்டத்தில் 100 அல்லது 200 ரூபாய் கூட கொடுங்கள். எங்கள் வீட்டு தோட்டத்தில் வேலை செய்ய வருபவர்களுக்கு நாங்கள் 500 ரூபாய் கொடுப்போம். அந்த கூலி அவர்களுக்கு போதாது என்றால் அந்த 200 ரூபாயை அவர்களுக்கு ஊக்கத்தொகையாக அரசு வழங்கலாம். இங்கு விவசாயம் பார்க்கவே ஆள் இல்லாத போது வேளாண்மைக்கு மட்டும் எதுக்கு தனி நிதிநிலை அறிக்கை? அதனால் என்ன பயன்? அது வெறும் ஏமாற்று வேலை மட்டும்தான். கிராமம் முழுவதும் நூறு நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன? இதுவரை எத்தனை லட்சம் மரக்கன்றுகள் நட்டு இருக்கலாம் அல்லவா? எத்தனை ஏரியை தூறு வாரியிருக்கின்றார்கள்? எத்தனை சாலையை சீரமைத்து இருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியுமா? இந்த நூறுநாள் வேலையால் எந்த பயனும் இல்லை. வேலை செய்ய வருபவர்கள் ஆங்காங்கே கூடி சீட்டாடுவது, பல்லாங்குழி ஆடுவது, புறணி பேசுவதுதான் நடக்கிறது. இதுக்கு தண்டமா ஒரு சம்பளம் வேறு

நூறு நாள் வேலையுடன் விவசாயத்தை தொடர்புபடுத்தி சீமான் பேசியதை விட்டுவிட்டு வெறும் திட்டத்தை மட்டும் அவர் நிறுத்தச்சொல்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், ட்விட்டரில் ' சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும்' என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 'சீமான் சொல்வது சரிதான்' என்ற ஹேஷ்டேகை இப்போது அவருக்கு ஆதரவாக ட்ரெண்ட் செய்துள்ளனர்.

மேலும், சீமான் மக்களின் வருமானத்தை மேம்படுத்தவும் விவசாயத்தை காப்பாற்றவும் முயற்சிக்கிறார் என்றும் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியலை உடைத்து தனிக்கோட்பாட்டுடன் சீமான் இருப்பதாகவும் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் சிறிதும் கவலைப்படவில்லை என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

No comments