ஆளுமைகளினை ஆவணப்படுத்தும் இணையத்தளம்!

யாழ்ப்பாண பெட்டகம் -நிழலுருக் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஆளுமைகளினை ஆவணப்படுத்தும் இணையத்தளம் ஒன்று எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 3மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனுடைய ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாண பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம் 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த 650 ஆளுமைகளுடைய கண்காட்சி ஒன்றை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடத்தியிருந்தோம்.

இதனுடைய தொடர்ச்சியாக இற்றைவரை ஆயிரம் ஆளுமைகளை ஆவணப்படுத்தி அவர்களது புகைப்படங்களோடு அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை உள்ளடக்கியதாக ஆவணத் தொகுப்பு வடிவிலான ஒரு இணையத்தளமொன்று அங்குரார்ப்பணம் செய்து யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments