இந்திய மீனவர் அத்துமீறல்:முதலமைச்சர் கவனத்திற்கு!



இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் கடற்தொழிலாளர்கள் அனுபவிக்கும் பாதிப்புக்களுக்குத் தீர்வுகாணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தெரிவித்துள்ளது. கடந்த (20) புதன்கிழமையன்று வவுனியா, வேப்பங்குளம் தூய திருச்சிலுவைக்கன்னியர் மடத்தில் நடைபெற்ற நான்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருமுதல்வர்கள் அடங்கிய வடக்கு-கிழக்கு ஆயர் மன்றக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரச்சனை முன்னுரிமைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டது.

இவ்விடயத்தில் இந்திய தமிழ்நாடு கடற்தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு இருப்பதால் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு இதனை தமிழ்நாடு ஆயர் மன்றத்தினதும், தமிழ் நாடு முதலமைச்சரினதும் கவனத்துக்கு கொண்டுவந்து இவ்விரு தரப்பினரோடும் இணைந்து செயற்படவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் முதற்கட்டமாக மீனவர்களின் பிரச்சனைகளை விளக்கும் கடிதங்கள் தமிழ்நாடு ஆயர் மன்றத்திற்கும், தமிழ் நாடு முதலமைச்சருக்கும் விரைவில் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

இது தவிர உலக ஆயர் மாமன்ற தயாரிப்புப்பணிகள், சமாதானத்துக்கும் ஒப்புரவுக்குமான மையத்தினை அமைக்கும் திட்டங்கள் ஆகியவை உட்பட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன. 

No comments