தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழா - சார்புருக்கன்

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவைநிறைவு விழா ஐந்து அரங்குகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட, வடமத்தி,

மத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கான விழாகள் முறையே (04.09.2021) பீலபெல்ட்,(05.09.2021)ஆன்ஸ்பேர்க், (11.09.2021)நெற்றெற்றால், (18.09.2021) ஸ்ருட்காட்  நடைபெற்றதைத் தொடர்ந்து, தென்மேற்கு மாநிலத்திற்கான விழா 19.09.2021அன்று சார்புருக்கன் அரங்கிலே காலை 10:00மணிக்குத் தியாக தீபம் திலீபனின் நினைவுப் பகிர்வுடனான அவரது ஒலிவடிவிலான உரையை அடுத்து மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணகத்தோடு தொடங்கியது. முப்பது ஆண்டுகள் ஒரு தலைமுறையைக் கடந்து செல்லும் காலமானபோதும் தொடர்ந்தும் துடிப்போடு செயலாற்றும் கழகமாகத் தமிழ்க் கல்விக் கழகம் இந்த ஆண்டும் தன்னைப் பதிவு செய்து வருகின்றமை சிறப்பாகும்.  

5,10,15ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோருக்குப் பணியாண்டு நிறைவிற்கான பட்டயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு, 20ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோர் தமிழ்வாரிதி, என்ற பட்டமளிப்பையும், 25ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியோர்  தமிழ்மாணி, என்ற  பட்டமளிப்பையும், 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்பணியாற்றியோருக்குக் கடந்த ஆண்டிலிருந்து யேர்மனியில் தமிழ்ப்பணி என்ற கருத்தாளத்தை சுட்டும் வகையிலமைந்த பதக்கம் அணிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையிலே சார்புருக்கன் அரங்கிலே பதக்கத்தை பெறுவதற்கு வருகைதந்த ஆசானை ஆடல் பாடலோடு விளக்கொளியேந்தி அரங்கிற்கு அழைத்து வந்தமை விழாவுக்குள் ஒரு விழாவாக அமைந்திருந்தததைக் காணமுடிந்தது.           அவரவர்; பணியாற்றும் தமிழாலய உறவுகள் புடைசூழ்ந்து சிறப்பாக அழைத்துவந்து அரங்கிலே இணைந்தமை அவர்களது அயராத பணிக்கான பெரும் அங்கீகாரமாக அமைந்ததோடு,  இன்னும் பல ஆண்டுகள் பணியாற்றுவதற்கான ஊக்கியாகவும் அமைந்தது. 20, 30ஆண்டுகள் பணியாற்றி மதிப்பேற்பைப் பெற்றபின் அவர்கள் தமது ஏற்புரையிலே 12ஆம்  ஆண்டை நிறைவுசெய்த மாணவர்களை நோக்கித் தாமிதுவரையாற்றிய  தமது கடமையைத் தமிழுக்கு ஆற்றிட முன்வரவேண்டுமென்று அழைப்பிவிடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழாலயத்திலே இணைந்தது முதல் 12ஆம் ஆண்டுவரை தமிழ்மொழியைக் கற்று நிறைவுசெய்தோருக்குச் செம்பகத்தின் வண்ணம் கொண்ட சிறப்பு ஆடை அணிவிக்கப்பட்டு அரங்கிற்கு அழைத்துவரப்பட்டுச் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர். அவர்கள் அழைத்துவரப்பட்டபோது அவையே எழுந்து நின்று வரவேற்றமை தமிழை வரவேற்பதுபோன்று அமைந்திருந்து. மதிப்பளிப்புகளைத் தமது பெற்றோர் சகோதரர்கள் மற்றும் உறவுகளோடு அரங்கிற்குச் சென்று பெற்றுக்கொண்டனர்.

தமிழ்பணியாற்றியோர், தமிழ்கற்றோருக்கான மதிப்பளிப்புகள்  மட்டுமன்றி,   இவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பயானக வெற்றிகளைத் தமதாக்கிய தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் அரங்கை நிறைவாக்கின. 2021ஆம் ஆண்டுக்கான கலைத்திறன் போட்டியிலே மாநிலமட்டத்திலே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய நொயிஸ்ரட்(1) பாட்சுவல்பாக்(2)சார்புருக்கன்(3)தமிழாலயங்களுக்கும், நாடுதழுவிய மட்டத்திலே புள்ளி-யடிப்படையில் முதல் முன்று நிலைகளுள் இரண்டாம் நிலையைப் பெற்ற நொயிஸ்ரட் தமிழாலயத்துக்கும் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கவிதை, உரையாற்றல், சிறப்புரை, வாழ்த்துரை  விடுதலை நடனங்கள் மற்றும் விடுதலைப்பாடல்களென அரங்கைச் சிறப்பித்து நகர்ந்து சென்ற தமிழ்க் கல்விக் கழகத்தின்  31ஆவது அகவை நிறைவுவிழா நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற தமிழினத்தின் இலட்சியத் தாகம்மிகு பாடலுடன் எழுச்சி பொங்க 2021ஆம் ஆண்டிற்கான அகவை நிறைவுவிழாகளின் நிறைவாம்சமாகச் சிறப்பாக நிறைவுற்றது.

No comments