ஆட்சியைக் கைப்பற்றும் போது நான் உயிருடன் இருக்கமாட்டேன் - சந்திரிகா


நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட சிறீலங்கா சுதந்திர கட்சியின் இன்றைய நிலையை நினைக்கும் போது பெரும் வேதனையடைகிறேன். கட்சியின் வீழ்ச்சிக்கு எனது ஆட்சிக்கு பின்னர் ஆட்சி புரிந்த இரு அரச தலைவர்களும் பொறுப்பு கூற வேண்டும்.

சிறீலங்கா சுதந்திர கட்சி நிச்சயம் ஒரு நாள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும். அதற்கு நெடுகாலம் செல்லும் அப்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்.

இளம் தலைமுறையினருடன் ஒன்றினைந்து கட்சியை பலப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க  தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திர கட்சியின் 70 ஆவது ஆண்டை முன்னிட்டு காணொளி ஊடாக கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சிறீலங்கா சுதந்திர கட்சியில் தான் பிறந்தேன், வளர்ந்தேன், அரசியலில் எழுந்தேன், வீழ்ந்தேன். எனது வாழ்க்கைக்கு சுதந்திர கட்சி வழிகாட்டியதை போன்று  நானும் எனது வாழ்க்கையை எனது தந்தை மற்றும் தாயாரை போன்று கட்சிக்காக அர்ப்பணித்தேன்.

நாட்டுக்காக  பல சேவைகளை சுதந்திர கட்சி புரிந்துள்ளது. பழமையான கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலையை எண்ணுகையில் பெரிதும் வேதனையடைகிறேன். நானும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று கருதுகிறேன். செய்த விடங்களுக்கு அல்ல செய்யாத விடயங்களுக்காக,

எனது தந்தையால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியை எனது தாயார் பலப்படுத்தினார். பாரிய போராட்டங்களுக்கு மத்தியில்  அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து சிறீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்கினோம்.

நாட்டுக்கான சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்ததால் மக்கள் 23 வருட காலம் தொடர்ந்து சுதந்திர கட்சியிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்தார்கள்.

அரசியலில் இருந்து 9 வருட காலம் விலகியிருந்து 2015ஆம் ஆண்டு மீண்டும் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுப்படுவதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தின. 2007 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தரப்பினர் மீண்டும் அரசியலுக்கு வருமாறு தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

அக்காலக்கட்டத்தில் சிறீலங்கா சுதந்திர கட்சிக்கும், நாட்டுக்கும் ஏற்பட்ட அவலநிலையினை கருத்திற் கொண்டு மீண்டும் கட்சியையும், நாட்டையும் முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் 2015 ஆம் ஆண்டு மீண்டும் அரசியலில் செல்வாக்கு செலுத்தினேன்.

சுதந்திர கட்சியில் இருந்து விரட்டப்பட்டவர்களே நான் சுதந்திர கட்சியை ஐக்கிய தேசிய கட்சியாக மாற்றிவிட்டேன் என விமர்சிக்கிறார்கள்.

2015 ஆம் ஆண்டு காலம் சென்ற  சோபித தேரர், சிவில் அமைப்புக்கள், தமிழ், முஸ்லிம், சிங்கள பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். ஐக்கிய தேசிய கட்சியுடன் தனித்து செயற்பட முடியாது. ஆகவே ஒரு பலமான கூட்டணியாக செயற்படுவோம் என்ற யோசனையை முன்வைத்தேன்.

சிறந்த கொள்கைகளுக்கு அமைய 100 நாள் திட்டம் உருவாக்கப்பட்டது. அனைவரது எதிர்பார்ப்புக்கு அமைய 2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

ஆனால் அனைத்தையும் ஒரு தனி நபர் இல்லாதொழித்தார். எனது ஆட்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்  மோசடிகாரர்களை பாராளுமன்றிற்கு கொண்டு வந்து அவர்களுக்கு உயர்மட்ட பதவிகளை வழங்கி சுதந்திர கட்சியின் கொள்கைக்கு முரணான சுதந்திர கட்சியை உருவாக்கினார்.

கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்படுகையில் எதிர்ப்பு தெரிவித்தேன் என்பதை அறிந்து என்னை விமர்சித்தார்கள். மரண அச்சுறுத்தல் விடுக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தினார்கள்.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்கா சுதந்திர கட்சி முன்னேற்றமடைந்தது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பிலிருந்தார். 

கட்சியை பலப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்துமாறு குறிப்பிடப்பட்டது. சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அதனை ஏற்றுக் கொண்டார். பின்னர் என்னையும் கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள்.

பலரது தியாகங்களுக்கு மத்தியில் தோற்றம் பெற்ற சுதந்திர கட்சி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.  நிச்சயம் ஒருநாள் பலமடையும். அதற்கு  நெடு காலம் செல்லும் அப்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன். இளம் தலைமுறையினருடன் ஒன்றினைந்து சுதந்திர கட்சியை பலப்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என்றார்.

No comments