பொதுமக்களிற்கு காசு:மூவர் கைது!

 


தென்னிலங்கை பாணியில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

புலம்பெயர் நாட்டிலிருந்து தனது மகன் அனுப்பிய பணமான இரண்டு கோடியை பகிர்ந்தளிக்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது. 

எனினும் நெய்தல் எனும் பேரில் மணல் வியாபாரத்தில் ஈடுபட்டவரும் இராணுவத்தரப்பின் முக்கிய செயற்பாட்டாளருமான ஒருவரே குறித்த பணம் வழங்கப்பட்ட கட்டட உரிமையாளர் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் ஒருவர் உதவி தொகை வழங்கியுள்ளார். 

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு மதவடி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை உதவி தொகை வழங்கப்படுவதாக அறிந்த அவ்வூர் மக்கள் பலரும் அவ்விடத்தில் கூடியிருந்தனர். 

அது தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார் உதவி தொகை பெற வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் , உதவி தொகை வழங்கியவர் , அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

அதேவேளை குறித்த கொடை வள்ளல் ஒருவருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments