வர்ண இராமேஸ்வரனிற்கு ஈழத்திலிருந்து அஞ்சலி!

 


வெறும் வாய்ச்சொல் வீரர்கள் போலன்றி தாயகத்தில் யுத்ததால் வீழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களது வாழ்வியலை கட்டியெழுப்புவதன் மூலமே கனவுகளை மெய்ப்பிக்கலாமென செயற்பட்டவர் வர்ண இராமேஸ்வரன் என வடமாகாணத்தின் முன்னணி ஆடை தொழிற்சாலையான இலங்கை நெய்தல் நூற்றல் ஆலை பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது.

கொரோனா பெரும் தொற்றின் மத்தியில் தாயகத்தில் தங்கியிருந்த ஈழப்பாடகன் வர்ண இராமேஸ்வரன் வெறுமனே வீட்டினுள் முடங்கியிருக்கவில்லை.

வடமராட்சியின் வல்லையில் இயங்கிவரும்  இலங்கை நெய்தல் நூற்றல் ஆலையினை மேலும் மேம்படுத்தி நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளிற்கு வேலை வாய்ப்பினை வழங்குவதே வர்ண இராமேஸ்வரனது நோக்கமாகவிருந்தது.

கொரோனா தொற்றினால் ஆலை முடங்கிவிடாதிருக்க நாள் தோறும் பயணித்த இராமேஸ்வரன் பணியாளர்களிற்கு நம்பிக்கையூட்ட நாள் கணக்கில் தங்கியிருந்து ஆலோசகைகளை வழங்கியதையும்  இலங்கை நெய்தல் நூற்றல் ஆலை பணிப்பாளர் சபை நன்றியுடன் நினைவுகூருகின்றது.

இலாப நோக்கற்ற ஆலையினை வலுப்படுத்தவும் இலாபத்தை பணியாளர்களிற்கு பங்கிட்டு கொடுக்கவேண்டுமெனவும் முன்னின்று இராமேஸ்வரன் பாடுபட்டிருந்தார்.

தாயகத்திலுள்ள தனது வயோதிப தாயாரை ஒருபுறம் பாதுகாத்தவாறு கலைகளிற்கான அகடமியொன்றை யாழில் கட்டியெழுப்பிக்கொண்டிருந்த அவர் கனடாவிலுள்ள தனது குடும்பத்தை மீண்டும் தாயகம் அழைத்துவரவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆனாலும் விதி வலியது.கனவுடன் கனடாவிற்குள் தரையிறங்கிய ஈழப்பாடகனை பெருந்தொற்று பலியாக்கிவிட்டது.

ஈழத்தின் வாழ்வியலுடன் பிரிக்க முடியாத கானங்களை தந்த ஈழப்பாடகன் நம்மிடம் உயிரோடு தற்போதில்லை. 

ஈழப்பாடகன் வர்ண இராமேஸ்வரனின் கனவுகள் மெய்ப்பிக்கப்படவேண்டுமென இலங்கை நெய்தல் நூற்றல் ஆலை பணிப்பாளர் சபை விடுத்துள்ள நினைவஞ்சலி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments