பிரான்சில் நினைவுகூரப்பட்டது மூதூரில் மனித நேயப் பணியாளர்களின் படுகொலை!!

சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17

மனித நேயப் பணியாளர்களின் 15 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (04.08.2021) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப் பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

மலர்வணக்கத்தை பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் செலுத்தியிருந்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து குறித்த 17 பணியாளர்கள் தொடர்பான பிரெஞ்சு மொழியிலான விளக்கத்தை செல்வன் மீராஐ் (பொறுப்பாளர் தமிழ் இளையோர் அமைப்பு கிளிச்சி),செல்வி டயாளினி ரவிச்சந்திரன் (தமிழ்ச்சோலை கிளிச்சி மாணவி) ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நினைவுரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் பாலசுந்தரம், பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா, தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு. திருச்சோதி ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

குறித்த 17 பணியாளர்களின் படுகொலை தொடர்பில் நீதி கிடைக்கவேண்டும் என்பதாக அனைவரது உரைகளும் அமைந்திருந்தன.

நன்றியுரையினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு. க.சச்சிதானந்தம் (சச்சி) அவர்கள் ஆற்றியிருந்தார்.

குறித்த நினைவேந்தலை நிகழ்த்த ஒத்துழைத்த அனைவருக்கும் கிளிச்சி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்ததுடன், குறித்த பணியாளர்களுக்கான நீதி தாமதமாகிக் கொண்டே செல்வதாகவும் பிரான்சைத் தலைமையகமாகக் கொண்ட பட்டினிக்கு எதிரான அமைப்போடு தொடர்பைத் தாம் ஏற்படுத்த முனைந்தபோதும், பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக அது கைகூடாமல் போனதாகவும் தெரிவித்த அவர், குறித்த பணியாளர்களுக்கான நீதியை பெறுவதற்கான முயற்சியை அமைப்புகளின் ஊடாகவே எடுக்கவேண்டும் என்பதாக அவருடைய உரை அமைந்தது.

ஏனைய கட்டமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது நினைவு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

No comments