இலங்கை அதிரடிப்படைக்கு தர்ம அடியாம்?யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதேவேளை மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் மணல் கொள்ளையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் விரைந்திருந்தனர். 

அங்கு மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்ய முற்பட்ட போது , கொள்ளையர்கள் அவர்கள் மீது மணல் அள்ளுவதற்கு வைத்திருந்த உபகாரணங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த தாக்குதல் சம்பவத்தில் அதிரடி படையினர் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.அதேவேளை தப்பி சென்றவர்களில் இருவரை துரத்தி மடக்கி பிடித்து அதிரடி படையினர் கைது செய்திருந்தனர். 

காயமடைந்த அதிரடி படையினர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை கைது செய்யப்பட்ட இருவரையும், மணல் கொள்ளை நடைபெற்ற இடத்தில் மீட்கப்பட்ட உழவு இயந்திரம் ஒன்றையும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

 


No comments