1580 நாள்!! முல்லையில் போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று இன்று (05.07.2021) முன்னெடுக்கபட்டுள்ளது.

தொடர் போராட்டத்தின் 1580 ஆவது நாளில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டம் இடம்பெறும் இடத்தில் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட அளவினர்களுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்துக்கான ஏற்பாடுகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார் சுகாதார விதிமுறைகளை குறித்து எச்சரித்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர். 10 பேர் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடமுடியும் என அறிவுறுத்தலையும் வழங்கியிருந்தனர்.

போராட்டம் இடம்பெறும் இடத்தில் 10 க்கு உட்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 10 க்கும் மேற்பட்ட பொலிஸ் , புலனாய்வாளர்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடியிருந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்தனர்.

கொரோனா நீண்ட பயண தடை இடைவெளிக்கு  பின்னர் முதன் முறையாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments