ஆரியகுளத்தை நிர்வாணமாக்கவேண்டாம்:மருத்துவர் முரளி!



ஆரியகுள புனரமைப்பு சுற்றுச்சூழலை கவனத்தில் கொள்ளாது முன்னெடுக்கப்பபடுவதாக விசனம் தொரிவித்துள்ளார் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

சிறுவயதில் எனது நண்பர் ஒருவரை அவ்ருடைய தாயார் கறி சமைப்பதற்கு வாங்கிவந்த மீன்களை துப்பரவு செய்து வைக்க சொல்லிவிட்டு வந்து  பார்த்தபோது நண்பர் சவர்க்காரம் போட்டு அனைத்து மீன் துண்டுகளையும் தேய்த்துக் கழுவி வைத்து இருந்தார். 

அது போன்ற ஒரு நிலை ஆரியகுளத்துக்கு ஏற்பட்டு இருப்பதை சில தினங்களுக்கு முன்னர் அங்கு சென்றபோது அவதானிக்க முடிந்தது. ஆரியகுளம் தமிழர் வரலாறில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளதுடன் யாழ் நகரப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய ஒரு நீர்நிலையாகவும் இருக்கிறது. இந்திய முடையன் (indian heron ) , சிறு சீழ்க்கை சிரவி (lesser whistling  duck ) , மந்தைக் கொக்கு (cattle egret ) , சின்னக் கொக்கு(little egret ) , நீளவால்  இலைக்கோழி (pheasant tailed Jacana ), ஊதா தாழைக்கோழி (purple swamphen ), பொது தாழைக்கோழி (common moorhen ), வெண்மார்பு நீர்க்கோழி (white breasted waterhen ), வெண்மார்பு மீன்கொத்தி(white breasted kingfisher ), பொது நீல மீன்கொத்தி(common blue kingfisher ) உட்பட பல அழகிய பறவையினங்களும் குளத்தில் உள்ள நீர் தாவரங்களின் மத்தியில் குஞ்சுகளுடன் இனம்பெருக்கி வாழ்ந்து வந்தன.


அண்மைக்காலத்தில் பலர் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி அதன் இயற்கையான சூழலை மாசு படுத்தி வந்த நிலையில் அப்போதைய மேயரை தொடர்பு கொண்டு மாசுக்களை சுத்தப்படுத்துவது தொடர்பாக உரையாடி வந்துள்ளேன். ஆனால் தற்போது சுத்தப்படுத்துவது என்ற பெயரில் பிளாஸ்டிக் அகற்றப்பட்டது மாத்திரம் அல்லாமல் அனைத்து நீர்த் தாவரங்களும் பிடுங்கி எறியப்பட்டு வசித்து வந்த அனைத்து பறவைகளின் வாழ்விடமும் அழிக்கப்பட்டு ஆரியகுளம் செயற்கையாக நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளது .



பல நாடுகளில் இயற்கை சூழலையும் அதில் வாழும் தாவரங்களையும் உயிரினங்களையும் அழிக்காது சுற்றுலாத்துறையை பெருக்க சூழலுடன் இணைந்த சுற்றுலாத்துறை (ecotourism) பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஆரியகுளத்தில் இயறகையான சூழலை அழிக்காது பறவைகள் சரணாலயம் ஆகவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். 

No comments