யாழில் ஊசியிலும் புகுந்து விளையாடிய மருத்துவர்கள்!


 யாழில் முதன்முறையாக வழங்கப்பட்ட "அஸ்ராசெனகா" தடுப்பூசி வளங்களில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கிளைகள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளன. 


யாழில் செயல்படுத்தப்பட்ட covid-19 தடுப்புக்கான தடுப்பூசி வழங்கல் தடுப்பூசியை அடுத்தவர்கள் தெரிவு செய்தல் போன்ற நிர்வாக விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குறித்த சங்கம் எழுத்துமூலம் மேலதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.


அதாவது யாழில் தடுப்பூசி செயற்படுத்துவதில் பிராந்திய தொற்றுநோய்கள் பிரிவு வைத்திய அதிகாரி தனது நிர்வாக எல்லைகளை மீறி சில முடிவுகளை செயற்படுத்தியதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின்  கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.


இது இவ்வாறு இருக்க மேலும் பல குற்றச்சாட்டுகள் பல தரப்பினரிடமிருந்து பரவலாக எழுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் தடுப்பூசி எடுத்து வருவதில் முறையான அனுமதிகள் பின்பற்றாமல் நோயாளர்கள் மற்றும் பிசிஆர் மாதிரிகளைக் கொண்டு செல்லும் அம்புலன்ஸ் வண்டிகளில் தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


யாழ்ப்பாணத்துக்கு தடுப்பூசிகளை எடுத்துவருவதில் யாழ் பண்ணையில் அமைந்துள்ள பிராந்திய மருத்துவ விநியோகப் பிரிவின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாமல் அதற்குரிய உத்தியோகத்தர்கள் அழைத்துச் செல்லப்படாமலும் தடுப்பூசி கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


யாழ் மாவட்டத்தில்  கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின்  குடும்ப உறுப்பினர்களுக்கு அஸ்ராசெனகா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.


சிலரது தனிப்பட்ட தேவைகளுக்காக வெளியாரின் குடும்ப உறுப்பினர்களுக்கும்,நட்சத்திர விடுதிகளில் பணிபுரிவோர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டதான குற்றச்சாட்டுகளும் அம்பலமாகியுள்ளது.


இவ்வாறு பல  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழில் செயற்படும் ஆதார வைத்திய சாலையில் மூன்று கிளைகள் வடமாகாண ஆளுநருக்கு குறித்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருந்தது.


 இவ்வாறான நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் தரப்பிடமிருந்து  குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான  குழுக்களும் அமைக்கப்பட்டதா? விசாரணை செய்யப்பட்டதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


இவ்வாறான குற்றச்சாட்டுகள் தென்னிலங்கையிலும் பேசப்பட்ட நிலையில் கொழும்பு தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சுதத் சமரவீர அண்மையில் குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments