யாழில் ஆமி,அதிரடிப்படை,காவல்துறை கூட்டு ரோந்தாம்?

இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் என்றுமில்லாத அளவில் அதிகரித்து செல்லும் குழுமோதல்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குழுமோதல் ,வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இச்சம்பவம் நேற்றைய தினம் பட்டப்பகலில்; மீசாலை - புத்தூர் சந்தியில் இடம்பெற்றுள்ளது.மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு காவல்துறை ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதி காவல்துறை அதிபர் பிரியந்த லியனகே என்பவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காவலரண்களையும் அதிகரிக்குமாறு அவர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார்.


No comments