வந்தது சுவிஸ் உதவி:வடகிழக்கிற்கும் பகிரப்படுமாம்!



இலங்கையின் கொவிட் 19 சவால்களை கையாளும் நடவடிக்கைகளுக்கு சுவிற்சர்லாந்து அரசு தன்னுடைய பங்களிப்பை வழங்குகியுள்ளது.

இன்று ஜூன் 8 செவ்வாய்க்கிழமை காலை, 0.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டிஜன் பரிசோதனைகள், 50 சுவாசக் கருவிகள், 150 ஒக்ஸிஜன் பிரிப்பாக்கி (வளியில் இருந்து ஒக்ஸிஜனை வடிகட்டி வழங்கும் கருவி) என்பனவற்றுடன் இலங்கை ரூபாய் 800 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனை பொருட்கள் கொழும்புக்கு வந்து சேரும் என கொழும்பிலுள்ள தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த உதவியானது, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் நீணடகால ஒத்துழைப்பின் உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் குறிகாட்டியாகவும் இருக்கிறதென தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய மிக தீவிரமான சுகாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரச அதிகாரிகளின் மூலம் கோரப்பட்ட உதவிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் மனிதநேய உதவித்திட்ட பிரிவானது கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் உள்ளடங்கலாக இடர்நிலைக் குழுவை அமைத்து, இலங்கையின் கொவிட் 19 சவால்களை கையாளுவதற்கு இயன்றளவான மருத்துவ உதவிகளை உடனடியாக இலங்கைக்கு வழங்குகிறது. இலங்கையிலிருந்து அறிவிக்கப்பட்ட தேவைகள் தொடர்பான விபரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, சுவிற்சர்லாந்து அரசினால் வழங்கப்படகூடிய மனிதாபிமான உதவிப் பொருட்களின் பட்டியல் தயார்செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை ஜூன் 8 அன்று ‘ சூரிச்’ இலிருந்து 16 தொன்; உதவிப்பொருட்களுடன் விமானம் கொழும்பில் தரையிறங்க உள்ளது. இந்த உதவி பொருட்களில் சுவிஸ் இராணுவ மருந்தகம் வழங்கிய 50 சுவாசக் கருவிகள், 150 ஒக்ஸிஜன் பிரிப்பாக்கிகள் மற்றும் பிற மருத்துவ பொருட்கள் (ஒக்ஸிஜனின் செறிவு நிலையை அளவிடுவதற்கான உபகரணங்கள் உட்பட) ஆகியவை உள்ளடங்கும். அத்துடன், சுவிஸ் சுகாதார அமைச்சு 0.5 மில்லியனுக்கும் அதிகமான அன்டிஜன் பரிசோதனைகளை வழங்குகிறது.

இவ்வுதவிப் பொருட்கள் கொழும்பில் சுகாதார அமைச்சினால் பெறப்பட்டு பின்னர் ஏனைய இடங்களுக்கு “ நியாயமான,நடுநிலையான பங்கீடு ” என்ற கொள்கையைப் பின்பற்றி நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் நிலவும் மருத்துவ மற்றும் மனிதாபிமான தேவைகளை இயன்றளவு நிவர்த்தி செய்யும் முகமாக பகிர்ந்தளிக்கப்படும்.

ஏற்கனவே கடந்த ஆண்டு கொவிட் 19 சவால்களை கையாள்வதற்கு ஏறத்தாள இலங்கை ரூபா 220 மில்லியன் பெறுமதியான உதவிகளை அளித்து சுவிற்சர்லாந்து அரசு தனது ஆதரவை இலங்கைக்கு வழங்கி இருந்தது. அக்டோபர் 2020 இல், கொழும்பு விமான நிலையத்திற்கான பி.சி.ஆர் சோதனை சாதனத்திற்கு சுவிற்சர்லாந்து நிதியளித்ததுடன் 39,000 பரிசோதனைப் பொதிகளையும் வழங்கியிருந்தது. கொவிட் 19 காரணமாக வெளிநாட்டில் தங்கிருந்த இலங்கையர்களை, குறிப்பாக வேலை வாய்ப்பை இழந்த இலங்கையர்களை மீள் அழைத்தல் நடவடிக்கையை ஆதரிக்கும் முகமாக இந்தப் பங்களிப்பின் நோக்கம் அமைந்தது. மேலும் 22 மில்லியன் இலங்கை ரூபாய்களை சுவிஸ் தூதரகம் உள்ளுர் பங்குதாரர்களுக்கு வழங்கி இருந்தது.

சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் இந்த மனிதநேய உதவித்திட்டமானது வறுமைக்கு உட்பட்டவர்கள், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கொவிட் 19 அவசர உதவிகளை வழங்குவதற்காக உள்ளுர் பங்குதாரர்களிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கான ,ன்றைய மனித நேய பங்களிப்பானது கடந்த ஒரு மாதத்திற்குள் தெற்காசியாவிற்கான சுவிற்சர்லாந்து அரசின் மனிதநேய உதவித்திட்ட பிரிவின் மூன்றாவது உதவி செயற்பாடு ஆகும். சமீபத்திய வாரங்களில், சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்த சுவிஸ் மனிதாபிமான உதவித்திட்ட பிரிவு, ஏற்கனவே 13 தொன்; உதவிகளை இந்தியாவுக்கும், 30 தொன் உதவிகளை நேபாளத்திற்கும் அனுப்பியுள்ளது. கொவிட் 19 தொற்றுநோயின் பின்னணியில் சுவிஸ் மனிதாபிமான உதவித்திட்ட பிரிவு உலகின் சுகாதார நிலைமைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மேலும் சுவிஸ் அரசு, கோரிக்கைகளின் அடிப்படையில் இயன்றவரை உதவிகளையும் ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments