கிராமசேவையாளரை கொல்ல முயற்சி!கிளிநொச்சியில் கிராம சேவையாளரை மணல் ஏற்றிய ரிப்பரால் மோதி கொலைசெய்ய முயற்சித்த சம்பவம் நேற்று தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் கரவட்டித்திடல் பழைய கண்ணகி அம்மன் கோவில் அருகாமையில் நேற்று  சட்டவிரோதமாக மண்ணகழ்வு இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் சட்ட விரோதமாக மணல் குவிக்கப்பட்டு ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்படுகின்றமை தொடர்பில் கிராம சேவையாளருக்குனு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அப்பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த அக் கிராம சேவையாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சாரதி உட்பட 6 பேர் குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுடன் பேசிய கிராம சேவையாளருக்கு ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்த குறித்த குழுவினர், பின்னர் ரிப்பர் வாகனத்தினால் கிராம சேவையாளரை மோதி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

அவ்விடத்திலிருந்து விலகி தர்மபுரம் பொலிஸ் நிரலையம் சென்று சம்பவம் குறித்து கிராம சேவையாளரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த ரிப்பர் வாகனத்திற்கு அனுமதிப்பத்திரம் ஏதும் இருந்திருக்கவில்லை எனவும், அப்பகுதி மணல் அகழ்விற்கு ஏற்ற அனுமதிக்கப்பட்ட பகுதி இல்லை எனவும் தெரிவிக்கும் கிராம சேவையாளர், தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் பெயர் பலகையுடன் குறித்த சட்டவிரோத  செயற்பாட்டில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாகனத்தின் சாரதி ஒட்டுசுட்டான் பிரதேச த்தை சேர்ந்தவர் எனவும், தன்னை அச்றுத்திய குறித்த செயற்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது பிரதேசத்தில் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த பொலிசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments