The Family man -2க்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போராட்டம்!

 ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாக The Family man -2 வெப் சீரிஸ் தொடரை Amazon Prime இல் இருந்து நீக்குமாறு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அரசியல் தலைவர்களின் எதிர்ப்பை அடுத்து தமிழ்நாட்டு அரசின் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை ஒன்றிய அரசுக்கு கடிதமாக எழுதி அத்தொடருக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் மீறி இந்தத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி லண்டனில் இருக்கும் அமேசான் தலைமையகத்தின் முன்பாகவே ஈழத் தமிழர்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.


ஈழ விடுதலைப் போராட்டத்தினை இழிவு படுத்தியும், தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டினை இழிவுபடுத்தியும் தயாரிக்கப்பட்ட “The Family man -2 திரைத் தொடரினை Amazon நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையான Amazon Prime இல் இருந்து உடனடியாக நீக்குமாறு பிரிட்டன் வாழ் தமிழர்கள் அமேசான் நிறுவனத்தின் லண்டன் தலைமையகத்திற்கு முன் 21-06-2021 மாலை 4.00 மணியளவில் ஒன்று திரண்டு எதிர்ப்பை தெரிவித்தனர். இப் போராட்டத்துக்காக பெண்களும், மாணவர்களும் திரண்ட போதும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க, அரசினால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே இப்போராட்டத்தில் பங்குபெற்றனர். ‘நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர்... இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பதாகைகளையும் ஆங்கிலத்தில் எழுதி அவர்கள் ஆர்பாட்டத்தில் ஏந்தி நின்றனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அமேசான் நிறுவனத்தின் லண்டன் தலைமையகத்தின் முக்கிய அதிகாரியிடம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களினால் மனுவும் வழங்கப்பட்டது.

அம்மனுவில், “ “The Family man -2 திரைத் தொடர் உடனடியாக Amazon Prime நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையிலிருந்து நீக்கப்பட வேண்டும், இனிவரும் காலங்களில் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழர்களின் வாழ்வியலையும் இழிவுபடுத்தும், தமிழ் பெண்களின் கலாச்சாரத்திற்கு முரணான திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது” என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அம்மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி இன்னமும் இரண்டு நாட்களுக்குள் அம் மனு தொடர்பான முடிவினை தெரிவிப்பதாக உறுதியளித்தார். ஆனால் இத்திரைத் தொடர் Amazon Prime இல் இருந்து நீக்கப்படாவிட்டால், நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்கிறார்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

லண்டனில் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள் லண்டன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.

No comments