மக்களை கொல்ல போகின்றனர்:சஜித்!

 


பட்டினியால் இலங்கை மக்களை கொல்ல கோத்தபாய அரசு முற்படுவதாக சஜித் பிறேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார்.

சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்குள் சேதன பசளையென களமிறக்க முற்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் மத்தியிலேயே சஜித் இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு செயற்பாடுகளையும் திட்டமிட்டு, அமல்படுத்தாத இந்த அரசாங்கம் மக்களை உயிருடன் கொல்வதற்கே முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, அதனோர் அங்கமாகவே இரசாயன உரத்தை தடைசெய்துள்ளது. அரசாங்கத்தின் உள்நோக்கம் இதிலிருந்து புலனாகிறது என்றார்.

“அரசாங்கத்தின் இந்த தன்னிச்சiயான முடிவு நாட்டில் உணவுப்பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்பதுடன் பாரிய பஞ்சத்துக்கும் வழிவகுக்கும்” என்றார்.

இயற்கை உர பயன்பாட்டை அதிகரிப்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.ஆனால் பொறுப்பற்ற முறையில் திடீரென எடுக்கப்பட்ட இத்தீர்மானம் விரைவில், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலும் பேரழிவு தரும் என்றார்.

இரசாயன உரத்தை தடை செய்துவிட்டு, செயற்கை உரங்களை இறக்குமதி செய்யப் போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.அப்படியாயின், உலகின் முன்னணி குப்பைக் குவியலாக நாட்டை மாற்றும் சதித்திட்டத்தை அரசாங்கம் தீட்டியுள்ளதென  எண்ணத்தோன்றுகின்றது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“குப்பைகளான கழிவு உரத்தை இறக்குமதி செய்வதால் நாட்டில் பக்டீரியா பரவும் என்பதுடன் இந்த இறக்குமதியானது விலங்குகள் மற்றும் தாவரவியல் சட்டத்துக்கு முரணானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரத் தடையால் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.இதனால், விவசாயிகள் உதவியற்றவர்களாக மாறி, விவசாய திணைக்களங்களுக்கு முன்பாக உரத்துக்காக காத்து கிடக்கின்றனர்.

எனவே, அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு விவசாயிகள் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments