தனக்கு பொய் தகவல் வந்ததென்கிறார் கோத்தா!

 


கொரோனா மரணங்கள் தொடர்பில் தனக்கு தவறான தகவல்கள் தரப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ,ம்மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், கொரோனா மரணங்கள் தொடர்பில் கிடைத்த தவறான தரவுகளின் காரணமாகவே இம்மாதம் 21ஆம் திகதி வரை அதனை நீட்டிக்க வேண்டி ஏற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 11ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், இம்மாதம் 21ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதன் பின்னர், குறித்த கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி விரிவாக விளக்கமளித்துள்ளார்.

இதன்போது, சில கொரோனா மரணங்கள் இவ்வாண்டு பெப்ரவரி ஆறாம் திகதி முதல் இம்மாதம் 11ஆம் திகதி வரையான நான்கு மாதக் காலப் பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன், சில கொரோனா மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.


இம்மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments