நான் புலி என்றால் நீ நாயா? பாராளுமன்றில் சாணக்கியன்

கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும், தமது அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கும், புர்கா தடை உள்ளிட்ட

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு குரல் கொடுக்காத கிழக்கின் முஸ்லிம் அரச விசுவாசிகள் இன்று கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்துவதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் வெறுப்பை உருவாக்கும் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவது தெளிவாக வெளிப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தொற்றில் உயிரிழந்த மக்கள் தொடர்பிலும் அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் ஈஸ்டர் தாக்குதலுக்கு விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதை போல, இந்த விடயத்திலும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து இந்த இறப்புக்கு காரணமான சகலருக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். முதலாம் கொவிட் அலை உருவாகிய வேளையிலும் தேர்தலை நடத்தும் ஒரே நோக்கத்திற்காக நாட்டினை முடக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அதேபோல் இரண்டாம் அலை உருவாக்கப்படவும் அரசாங்கமே காரணம், நாட்டில் கொரோனா பரவுகின்றது என தெரிந்தும் 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றும் நோக்கில் நாட்டினை முடக்காது இருந்தனர். இப்போதும் போர்ட் சிட்டி நெருக்கடிகளை சமாளிக்க நாட்டினை முடக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். ஆனால் இன்று எதிர்பாராத விதமாக விவாதத்தை நிறுத்திவிட்டனர். இது ஜனாதிபதிக்கு தெரிந்தால் ஆளும் கட்சியினர் நன்றாக வாங்கிக் கட்டிகொள்ளப்போகின்றனர்.

கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமா நடத்தப்படாதா என்ற சந்தேகம் இருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அல்லது இந்த அரசாங்கத்தின் கைக்கூலிகள் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த முதலமைச்சரை கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விவகாரம் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். கிழக்கு மாகாணத்தில் சமூகங்களுக்கு தேவையான விடயங்களில் நாம் எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச சபை செயலகத்தை உப செயலகமாக தரம் குறைத்து தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள உறவை நாசமாக்க ஒரு சில முஸ்லிம் தரப்பினர் இதனை செய்து வருகின்றனர்.

கிழக்கில் இஸ்லாமிய மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினை இருக்கின்ற நிலையில் அதற்கு எதிராக பேசாதவர்கள், தமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனை கைது செய்துள்ளமைக்கு குரல் கொடுக்காத நபர்கள், முஸ்லிம்களின் புர்க்காவை தடை செய்துள்ளமைக்கு குரல் கொடுக்காதவர்கள், அசாத் சாலியின் கைதுக்கு குரல் கொடுக்காதவர்கள், மதரசாவை மூடப்பவதற்கு குரல் கொடுக்காத ஒரு சில முஸ்லிம் தரப்பினர் தமிழர் உப பிரதேசத்தை தரமுயர்த்துவது குறித்து எதிர்ப்பு குரல் கொடுக்கின்றனர் என்றார். 

No comments