நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவைக் 94% கண்டறிய முடியும்!


இங்கிலாந்தில், எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் நன்றாக பயிற்சி தரப்பட்ட நாய்கள் மோப்ப சக்தி மூலம், ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை, 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து எல்.எஸ். எச்.டி.எம்., நோய் தடுப்பு பிரிவு தலைவர் ஜேம்ஸ் லோகன் கூறியதாவது:-

ஒருவரின் உடம்பில் இருந்து வெளிப்படும் வாசனை மூலமாக, அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன. இது, எங்கள் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

இதற்காக மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கினர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், சாக்ஸ் உள்ளிட்டவற்றை நாய்களிடம் கொடுத்து, மோப்ப சக்தியை உணரச் செய்தனர். இதையடுத்து 3,758 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன.

அவற்றில், கொரோனா நோயாளிகள் 325 பேர், நோயால் பாதிக்கப்படாத 675 பேரின் சளி மாதிரிகளை, நாய்கள் துல்லியமாக அடையாளம் கண்டன. இது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் இரண்டு மோப்ப நாய்கள் மூலம் அரை மணிநேரத்தில் 300 பயணிகளிடம் கொரோனா பாதிப்பு உண்டா? இல்லையா? என்பதை கண்டறிந்து விடலாம் என அவர் கூறினார்.

No comments