யார் நல்ல கொலையாளி: வாக்களித்தனரா தமிழர்!

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தின் போது படுகொலைகளைப் புரிந்த சுனில் ரத்னாயக்க என்ற முன்னாள் இராணுவ

சார்ஜன்ட்டிற்கு பொது மன்னிப்பு வழங்கிய விடயம் பேசுபொருளானது .

இது தொடர்பாக கடந்த பாராளுமன்ற அமர்வின் போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஒய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடும் ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டுதான் சுனில் ரத்னாயக்கவிற்கு பொதுமன்னிப்புக்கொடுத்தமைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக இராணுவத்தினரைக் காட்டிக்கொடுப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர,ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைப் பார்த்து குற்றஞ்சாட்டினார்.

இப்படியாக சரத் பொன்சேகா நாட்டையும் இனத்தையும் மீண்டும் மீண்டுமாக காட்டிக்கொடுப்பதாகவும் கோபாவேசத்தோடு கூறினார்.

இதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா மனிதப் படுகொலைகளை நிகழ்த்திய சுனில் ரத்னாயக்கவிற்கு மன்னிப்புவழங்கியமை தவறு என்று மீண்டும் கூறினார்.

கடந்த காலத்திலும் இராணுவத்தினர் பெரும்குற்றம் இழைத்த போது அவர்கள் தண்டிக்கப்பட்டமைக்கு மானம்பெரி , கிருசஷாந்தி படுகொலை வழக்கு போன்றவை சான்று எனத் தெரிவித்ததுடன் தான் நீதிமன்றத்திலுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே சுனில் ரத்னாயக்க தொடர்பாக கருத்துவெளியிட்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து சரத் பொன்சேகா மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்ததாகவும் இதற்கு புலம்பெயர் அமைப்புக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டமையே காரணம் எனவும் கூறினார்.


இதனையடுத்துப் பேசிய சரத் பொன்சேகா ,போரின் போது யுத்தத்தை நன்றாக நடத்தியமைக்காக தமிழ் மக்களுக்கு எவ்வித துன்புறத்தலையும் மேற்கொள்ளாமைக்காக மனித உரிமைகளை மதித்துக் கொண்டு யுத்தம் நடத்தியமைக்காகவே தமிழ் மக்கள் இராணுவத்தளபதிக்கு வாக்களித்ததாகவும் அதனையிட்டு பெருமைப்படவேண்டும் தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது கோபம் இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.


No comments