கூகிள் வரைபடம் மண்டபம் மாறிச் சென்ற மணமகன்!


இந்தோனேஷியாவில் , கூகுள் வரைபட வழிகாட்டுதலால் மணமகன் குடும்பத்தினர், வேறோரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் வரைபடம் கையில் இருந்தால் போதும் முன்பின் தெரியாத இடத்திற்கு கூட இலகுவாகச் சென்று வரலாம். ஆனால் சில நேரங்களில் கூகுள் வரைபடம் பலரை பல மணி நேரம் சுற்ற விட்ட கதைகளும் உண்டு. அப்படியான ஒரு சம்பவம் தான் இந்தோனேஷியாவில் அரங்கேறியிருக்கிறது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில், நடைப்பெறவிருந்த திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும், மகிழுந்து மற்றும் சிற்றூர்தியில் செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி, கூகுள் வரைபட வழிகாட்டி மூலம் வழியை பார்த்து கொண்டு அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சென்றடைய வேண்டிய திருமண மண்டபத்தை கூகிள் வரைபட வழிகாட்டி இது தான் என்று காட்டியது.  உடனடியாக அனைவரும் இறங்கி மண்டபத்தின் உள்ளே சென்றுள்ளனர். ஆனால் அங்கு வேறொரு மணமகள் மண மேடையில் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பின்னர்தான் கூகுள் வரைபட வழிகாட்டி வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஜாவா தீவில் இரு மண்டபங்கள் அடுத்த அடுத்த தெருவில் உள்ளதால் தான் கூகுள் வரைபட வழிகாட்டி சற்று குழம்பிவிட்டது .

இதனையடுத்து அங்கிருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் சரியான பாதையை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டு ஒரு வழியாக மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.

கூகுள் வரைபட வழிகாட்டி வழி தவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற மாப்பிள்ளை வீட்டாரால் அப்பகுதியினரிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments