மாணவர்கள் மீது மதகுருக்கள் தாக்குதல்!

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்

காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம், தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனவும் கூறி அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்களினால் இன்று காலையில் மாணவர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என மாகாண கல்வித் திணைக்களத்தினால் மூன்று வருடங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்களும் மற்றும் இங்குள்ளவர்களுடன் இணைந்து மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை மற்றும் கற்களை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவ இடத்திற்கு தெல்லிப்பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் கல்வித் திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இங்கு வருகைதந்து, நிலைமை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

No comments