நிரோஸை துரத்தும் காவல்துறை!



நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.


இவ் வழக்குகளுக்கான அழைப்பாணைகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 
நிலாவரை கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களமும் இராணுவமும்  இணைந்து இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இவ் அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன. மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தவிசாளரே காலரணம். பலரை அழைத்து தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் முறையிட்டனர்.

 அதனடிப்படையில், தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நளின் வீரரத்தினவுக்கும் இடையில் மல்லாகம் சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கியோர் சமரசத்திற்கு முயற்சித்தனர். தவிசாளரை நிலாவரை விடயத்தில் தலையிடக்கூடாது எனக் கூறி  சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகளும் இடம்பெற்றன. இதற்கு தவிசாளர் உடன்படவில்லை.
 
தவிசாளர், தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்குமுகமாக தமக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துவதுடன் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும் என விட்டுக்கொடுப்பின்றி வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
 
பின்னர் தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச சபை , பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு அறிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெற்றே நிலாவரை மற்றும் உருத்திரபுரம் பகுதியில் செயற்படும் என அறிவித்திருந்தார். எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மற்றும் தமக்கு உத்தியோக பூர்வ அறிவிப்புக்களை செய்து தொல்லியல் திணைக்களம் செயற்பட கோரிய தவிசாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அறிவிப்பிற்கும் நடைமுறைக்குமிடையில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அன்றைய தினத்திலேயே வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் தவிசாளருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் மீள மன்றில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.  அனுமதியின்றி அச்செழு அம்மன் வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பிரதேச சபையின் அனுமதியின்றி வீதி அதிகாரசபை நாட்டிய பெயர்ப்பலகையினை தவிசாளர் அகற்றிய வழக்கே மீள எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
 
குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிசார் தீவீரமுயற்சி எடுத்தனர். தவிசாளர் மல்லாம் நீதிமன்றில் தோன்றி சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் ஊடாக உள்ளூராட்சிக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தை தான் நடைமுறைப்படுத்தும்போது எழுந்த பிரச்சினை எனத் தெரிவித்து அரசியல் பழிவாங்கல் கைதில் இருந்து முன் பிணையில் தற்போது உள்ளார்.  இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திணைக்களம் உள்ளுராட்சித் திணைக்களத்தின் சட்டவிதிகள் மீது கவனத்தினைச் செலுத்தாது தாம் பிரதேச சபையின் அனுமதிபெறவேண்டிய அவசியமில்லை என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தது. 

இந் நிலையில் நாளை மறுதினம் புதன் கிழமை மத்திய அரசாங்கத்தின் தாபனங்களான தொல்லியல் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசின் தாபனங்கள் உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தை தவிசாளர் பிரயோகித்தமைக்காக அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்  எடுத்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments