சமூக ஊடகங்களை முடக்க முயற்சி மும்முரம்!

 


சமூக ஊடகங்களினை மையப்படுத்தி தமிழ் இளைஞோரை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.

முன்னணி சமூக ஊடக செயற்பாட்டாளர்களை கைது செய்து அரசு சிறையில் அடைத்துமுள்ளது.

இதனிடையே இனத்துவேச கருத்துக்களை வெளியிடுவோரை தண்டிக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாத மற்றும் பயங்கரவாத கருத்துக்களை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யும் தரப்பினருக்கு தண்டனை வழங்கக்கூடிய வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் சாசனத்தில் கருத்து சுதந்திரம் காணப்பட்டது என்ற போதிலும் அதற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தற்போதைய சட்டத்தில் திருத்தங்களை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சுமத்தினார்.

இனவாதத்தைத் தூண்டும் இனத்துவேச செயல்பாடுகளில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திய கருத்திற்காக கைதானதுடன் மேலும் பலர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments