சாட் நாட்டின் ஜனாதிபதி தாக்குதலின் பின் உயிரிழந்தார்


ஆபிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்து வந்த இட்ரிஸ் டெபி நாட்டின் வடக்கில்  ஏற்பட்ட தாக்குதலில் ஒன்றில் காயமடைந்த நிலையில் நேற்று செவ்வாக்கிழமை உயிரிழந்துள்ளார்.

சாட் நாட்டின் வடக்கில் முன்னரங்கப் பகுதியில்  கிளர்ச்சியாளர்களுடன் போராடும் படை வீரர்களைப் பார்வையிடச் சென்றபோது கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இட்ரிஸ் டெபி காயமடைந்தார் என படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆறாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் என தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர் இவர் உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது சாட் நாட்டின் அரசாங்கமும் பாராளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

68 வயதான டெபி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அதிகாரத்தில் இருந்துள்ளார். அத்துடன் ஆப்பிரிக்காவின் மிக நீண்ட காலம் நாட்டின் தலைவராக இருந்து வந்துள்ளார்.

ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து 1990 ல் ஆயுதமேந்திப் போராடியதின் மூலம் ஆட்சிக்கு வந்தார். 

ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் ஜிஹாதி குழுக்களுக்கு எதிரான போரில் அவர் பிரான்ஸ் மற்றும் பிற மேற்கத்திய சக்திகளின் நீண்டகால கூட்டாளியாக இருந்தார்.

இவரது இறுதி சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

37 வயதுடைய நான்கு நட்சத்திர ஜெனரலான டெபியின் மகன் தலைமையிலான ஒரு இராணுவ சபை அடுத்த 18 மாதங்களுக்கு ஆட்சி செய்யும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments