கோவில்களிற்கு வந்தது கட்டுப்பாடு!

 


இலங்கை அரசு புதிய கொரோனா அலை தொடர்பில் ஆலயங்களிற்கும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவருகின்றது.

இதன் பிரகாரம் சமய வழிபாட்டு இடங்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் 19  வழிகாட்டல்கள்

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சரினால் 23.04.2021 ஆந் திகதி வெளியிடப்பட்ட கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துமுகமாகப்  பொதுமக்கள் ஒன்று கூடும் பொது நடவடிக்கைகள் தொடர்பான மாற்றப்பட்ட வரையரைகள் தொடர்பான வழிகாட்டுதலிற்கு அமைவாக எதிர்வரும் 31.05.2021 வரையில் அமுலில் இருக்கும் வகையில்  இந்து ஆலயங்கள் அனைத்தும் கீழ்க்கண்ட வரையரைகளைக் கருத்தில் கொண்டு செயற்படுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

• ஆலயங்களில், சுகாதாரப் பாதுகாப்பு மற்றுந் தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து (அந்த ஆலயத்திற்குட்பட்ட கட்டடத்தொகுதி மற்றுந் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒரு சந்தர்ப்பத்தில் தனிநபர் வழிபாட்டிற்கு அனுமதிக்கக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமூக இடைவெளியைப் பாதுகாத்து 50 தனிநபர் வழிபாட்டிற்கு அனுமதிக்கக்கூடிய இடவசதி இல்லாத ஆலயங்கள்  பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அனுமக்கப்பட்ட  எண்ணிக்கையில் மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் தனிநபர் வழிபாட்டிற்கு அனுமதிக்க முடியும்.

• ஆலயங்களில் வழமையான பூஜை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவிதக் கூட்டுச் செயற்பாடுகளையோ  ஒன்றுகூடலையோ  அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு கூட்டுப் பிரார்த்தனைகள், திருவிழாக்கள் அல்லது திருமண வைபவம் போன்ற ஒன்று கூடல்கள்  நடத்தும் தேவை ஏற்படும் போது பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

• ஆலயத்தினுள் எப்பொழுதும் முக மறைப்பை (Mask) அணிதல் வேண்டும். எல்லோருடனும் ஒரு மீற்றர் தூர இடைவெளியைப் பேணுதல் வேண்டும். 

• தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் எல்லா ஆலயங்களும் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு : ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களைப்  பார்வையிடவும்.

தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பிற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு  மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அ.உமாமகேஸ்வரன் 

பணிப்பாளர்

No comments