தமிழ் நாட்டின் பெயர் மாற்றமா! கொந்தளித்த சீமான்!


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று, திருப்பூர், குளித்தலை பேருந்து நிலையம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று இரவு திருச்சியில் பரப்புரை ஆற்றிய அவர், “அதிமுகவும், டிடிவி தினகரனும், அம்மாவின் ஆட்சி நடத்துவோம் என்று சொல்கிறார்கள். அதுபோல் மு.க.ஸ்டாலினால் அப்பாவின் ஆட்சியைப் போல் நடத்துவேன் என்று சொல்ல முடியுமா?. அப்படியானால் ஒரு இடத்தில் கூட டெபாசிட் தொகை கிடைக்காது. அதனால்தான் திமுகவினர் அதுபற்றி பேசாமல் பாஜக வந்துவிடும் என்று கூறிவருகின்றனர்” என்று தெரிவித்தார்.

“ஓட்டு போய்விடும் என்பதால் பிரதமர் மோடி படத்தை அவரது கட்சிக்காரர்களே போடாமல் ஓட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று விமர்சித்த சீமான், தமிழ்நாட்டின் பெயரை மாற்ற முயல்கிறார்கள். எவ்வளவு முயன்றாலும் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற விடமாட்டோம். வேண்டுமானால் இந்தியாவுக்கே தமிழ்நாடு என்று பெயர் வைப்போம். 20 சீட் வாங்கிக் கொண்டு எதற்கு இந்த வேலை. அதிலும் வெற்றி பெற மாட்டார்கள், இருந்தாலும் அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள் எல்லாம் வந்து பிரச்சாரம் செய்கிறார்கள்” என பாஜகவை விமர்சித்தார்.

ஆட்சியிலிருந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளாகச் செய்யாத ஒன்றை அடுத்த 5 ஆண்டுகளில் எப்படிச் செய்துவிடப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய சீமான், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம். கல்விக்கு முன்னுரிமை அளிப்போம். உயிர்காக்கும் சிறந்த மருத்துவம் அளிப்போம். தாய்மொழியில் கல்வி கொடுப்போம். நிலவளம் சார்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். சிற்றூரின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம். நஞ்சில்லா உணவு வழங்குவோம் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இறுதியாக நேரமாகிவிட்டது வழக்குப்போட்டுவிடுவார்கள், குறிப்பாக நான் என்றால் வழக்குப்பதிவு செய்வதில் உடனடியாக செயல்படுவார்கள், அவ்வளவு நேர்மையானவர்கள் என தனக்கே உரியப் பாணியில் விமர்சித்து உரையை நிறைவு செய்தார் சீமான்.

No comments