இந்துக்களுக்கு தொல்லியல் ஆய்வு! இஸ்லாமியருக்கு ஜனாஸா எரிப்பு! கத்தோலிக்கருக்கு ஈஸ்டர் குண்டு! பனங்காட்டான்


இனவாதத்தில் மூழ்கி இனவழிப்பில் சிக்கி அகதிகள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போயுள்ள இலங்கை, இப்போது ''மதம்'' பிடித்து வெறியாட்டம் ஆடுகிறது. 

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சனையில் துவண்டு கொண்டிருக்கும் இலங்கை, கடந்த ஒரு தசாப்தமாக போர்க்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடு, ஒப்புக்கொண்ட பொறுப்புக்கூறலை நிறைவேற்ற மறுக்கும் அகங்காரப் போக்குகளால் சர்வதேசத்தின் முன்னால் கைதியாக நிற்கிறது. 

உள்நாட்டில் தன்னை மீசையில் மண்படாத ஒரு வீரனாகக் காட்டிக் கொண்டாலும் ஜெனிவா குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக உலக நாடுகளிடம் இரந்து நிற்கும் நிலையேற்பட்டுள்ளது. 

கோதபாயவின் உள்வட்டக் கூட்டாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக உளற ஆரம்பித்துள்ளனர். சீனாவின் ஆதரவு தங்களுக்கே என்கிறார் ஒருவர். உலகநாடுகள் எங்கள் பக்கம் என்கிறார் இன்னொருவர். 21 நாடுகளின் ஆதரவு தங்களுக்கு உறுதியாகிவிட்டது என்கிறார் மற்றொருவர். 

ஆனால், அதே கோதபாய அணியின் மற்றும் சிலரது கருத்துகள் வித்தியாசமானவை மட்டுமன்றி விசித்திரமானவையும்கூட. 

ஜெனிவாவில் இந்தியா நியாயத்தின் பக்கம் நின்று(?) இலங்கையை ஆதரிக்க வேண்டுமென கெஞ்சும் பாணியில் வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல. இலங்கை தனது எதிர்கால நலன்கருதி 13வது திருத்தத்தை அமல் செய்து தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டுமென்று ஜெனிவாவில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி விடுத்த கோரிக்கையை, இனவாத அமைச்சர் சரத் வீரசேகர நையாண்டி பண்ணியுள்ளார். 

'இது இந்தியாவின் வழமையான புலம்பல்" என்பது இவரது கூற்று. ஒருவகையில் பார்க்கின் இருவருமே புலம்பல்தான். இலங்கை அரசு ஒருபோதும் நிறைவேற்ற விரும்பாத 13வது திருத்தத்தின் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ள இந்தியா, அதனையே செயற்படுத்துமாறு தொடர்ந்து கேட்டு வருவது தமிழரை ஏமாற்றும் ஒரு நாடகம். 

ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். எந்தத் தீர்மானத்தை என்றுதான் புரியவில்லை. பதினெட்டு மாத காலநீடிப்பையா? 

தமது எதிர்கால அரசியல் பயணம் பற்றிய கேள்விக்குறியுடன் நிற்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பல படிகள் மேலேறி நின்று, எத்தனை பிரேரணைகள் நிறைவேறினாலும் தங்களை எவரும் எதுவுமே செய்ய முடியாதென எச்சரித்துள்ளார். பிரேரணை நிறைவேறினாலும் சரி, நிறைவேறாது போனாலும் சரி தங்களுக்கு எல்லாமே ஒன்றுதான் என்பது இவரது அரசியல் அந்திமகால வீராவேசம்.

ஜெனிவாவை மையப்படுத்தி காரசாரமாக இடம்பெறும் கண்டனங்கள், எச்சரிக்கைகள், மன்றாட்டங்களுக்கு இந்த மாத 3வது வாரத்தில் விடை கிடைக்கும். 

இந்தப் பின்னணியில், இலங்கையில் இப்போது பூதாகரமாக பொங்கியெழும் மதவாத நடவடிக்கைகள் ராஜபக்சக்களின் அரசியலுக்கு அவசியமாகியுள்ளது. 

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கத்தோலிக்கர்கள் என்னும் மும்மதத்தினரையும் அவர்களின் வழிபாட்டு நம்பிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினராக்கி அடிமைப்படுத்தும் திட்டத்தை,  ராஜபக்சக்கள் மெதுமெதுவாக மேற்கொண்டு வருகின்றனர். 

குடித்தொகையின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து சிங்களவரை பெரும்பான்மையினராக அடையாளப்படுத்தி, இலங்கை பெரும்பான்மையினரால் ஆளப்படும் நாடு எனவும், இங்கு வாழும் மற்றைய இனத்தவர்கள் சிறுபான்மையினர் எனவும் வகுத்து அவர்களின் மதசார் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதும் மறுக்கப்படுவதும் இப்போது வேகம் கொள்கிறது. 

இலங்கை என்றால் இனப்பிரச்சனையுள்ள நாடு என்ற வரலாற்று அடையாளத்தை இப்பொழுது மதவாதமும் சேர்த்து அம்பலப்படுத்தி வருகிறது. மேலோட்டமாக சில அம்சங்களை இங்கு நோக்கலாம். 

இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களையும், புராதன பாரம்பரிய நிலங்களையும் அழித்தொழிக்கும் நோக்குடன் தொல்லியல் திணைக்களம் பேரினவாதத்துக்கு சாதகமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. நீதிமன்றங்கள், நீதி மறுக்கப்படும் அல்லது நீதி பின்தள்ளப்படும் மன்றங்களாக மாற்றம் கண்டுள்ளன. தமிழரின் தாயகமான வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படுமென்று நல்லாட்சி அரசில் அமைச்சராகவிருந்தபோது சஜித் பிரேமதாச முன்மொழிந்த திட்டத்தை ராஜபக்சக்கள் நடைமுறைப்படுத்துகின்றனர். 

இஸ்லாமியர்கள் தங்கள் மத அடிப்படையில் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் உரிமையை கொரோனா நோய்த்தொற்றை காரணம் காட்டி மறுக்கும் ஆட்சிபீடம், தான்தோன்றித்தனமாக அவைகளை எரித்துவிடுகிறது. சர்வதேச மட்டத்துக்கு இதனை இஸ்லாமியத் தலைவர்கள் எடுத்துச் சென்றதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அடக்கம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. 

ஆனால், அதற்கான விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. அதேசமயம் வடக்கே கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள இரணைதீவில் அடக்கத்துக்கான மையவாடியை அமைத்து தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையே இனமுறுகலை ஏற்படுத்தும் வி~ விதையை அரசு தூவியுள்ளது. 

மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அவரவர்களின் பிரதேசத்தில் அடக்கம் செய்ய மறுப்பது, தொடர்ந்தும் அவர்களின் மத உரிமையைப் பறிக்கும் அத்துமீறல். 

2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையடுத்து உருவாகியிருக்கும் அசாதாரண சூழல், கத்தோலிக்க மக்கள் மீது அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் மறைத் தாக்குதலை காட்டுகிறது. அடுத்த மாதத்துடன் இக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்களாகப் போகிறது. 

இச்சம்பவத்தில் 270க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இவர்களுள் கணிசமானோர் அங்கவீனர்களாகியுள்ளனர். 

கத்தோலிக்கர் எனப்படுபவர்கள் தனித்த ஓர் இனத்தவர்கள் அல்ல. சிங்களவர், தமிழர் ஆகிய இரு இனங்களிலும் கத்தோலிக்கர்கள் உளர். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் மரணித்தவர்கள், காயமுற்றவர்களில் ஈரினங்களையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். 

ஆனால், ஆட்சித்தரப்பு சிங்கள பௌத்தம் என்ற எதேச்சாதிகார கோட்பாட்டு நிலையில் இயங்குவதால், ஈஸ்டர் தாக்குதல் விசாரணையிலும் குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளிலும் போதிய அக்கறை காட்டவில்லை. இதுபோன்ற தாக்குதல் தலதா மாளிகை, அநுரதபுரம் ரஜமகா விகாரை அல்லது எங்காவது ஒரு பௌத்த வழிபாட்டுத் தலம் மீது இடம்பெற்றிருந்தால் இதுவரை விசாரணை முடிவுற்று, பலர் கைதாகி தண்டனையும் வழங்கப்பட்டிருக்கலாம். 

ஆனால், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது கத்தோலிக்கர்களான சிறுபான்மை மதக்குழுமத்தின் வழிபாட்டுத் தலங்கள் மீது. அதனாற்போலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவையே விசாரணையைத் தொடர அனுமதிக்கப்பட்டது, 

காரணம் கூறப்படாத இழுபறிக்குப் பின்னர் ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் மகாசங்கத்தினருக்கும், பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகைக்கும் கையளிக்கப்பட்டது. விசாரணை திருப்திகரமாக நடைபெறவில்லையென்றும், திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதல் தொடர்பான குற்றங்கள் மறைக்கப்படக் கூடாதெனவும் சுட்டிக் காட்டியுள்ள பேராயர், முதன்முறையாக சிங்கள அரசுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அடுத்த மாதம் (ஏப்ரல்) 21ம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், அன்றைய தினம் கறுப்புக்கொடி பறக்க விடப்படுமென்பது இவரது முன்னறிவித்தல். 

இந்த அறிவித்தலை ஷமுதன்முறையாக| என்று சுட்டுவதற்கு நியாயமான காரணமுண்டு. கடந்த காலங்களில் பேராயர் எந்தவொரு வேளையிலும் அரசுக்கு எதிராக இவ்வாறு நடந்து கொள்ளவில்லை. 

பொல்காவலை என்ற சிங்கள கிராமத்தில், 14 பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்தவர் இவர். எனவே குடும்ப உறவு, சகோதர பாசம், உறவினர் மீதான பிடிமானம் என்பவை இவருக்குப் பிறப்பால் கிடைத்திருக்கும். இவர் வகிக்கும் பேராயர் பதவி என்பது சகலரையும் சமமாக மதித்து ஆன்மிகப் பணியாற்றும் மகிமை வாய்ந்தது. 

தமிழர் தங்கள் உரிமைப் போராட்டங்களை நடத்திய வேளைகளில், சிங்கள அரச இயந்திரம் அவர்கள் மீது கோரத்தாக்குதலை நடத்தி கொன்றழித்தபோது பேராயர் ஒருபோதுமே அதனைக் கண்டிக்கவில்லை. நவாலி தேவாலயம், நாகர்கோவில் பாடசாலை என்பவற்றின் மீது சிங்கள தேசத்து யுத்த விமானங்கள் குண்டு வீச்சு நடத்தி பல நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்தபோதும் மௌனம் காத்த பெரும்துறவி இவர். 

எப்போதும் சிங்கள அரசாங்கங்களின் நம்பிக்கைக்குரியவராகவே இவர் தம்மைக் காட்டிக் கொண்டவர். ஷநான் முதலில் ஒரு சிங்களவன். பின்னரே ஒரு கத்தோலிக்கர்| என்ற பாணியில் தம்மை தமது செயற்பாடுகளால் காட்டிக் கொண்டவர். 

2015ம் ஆண்டு புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, சுமார் எட்டு மில்லியன் ரூபாக்கள் கொண்ட உறையொன்றை பேராயர் அவரிடம் கையளித்தார். ஆனால், அப்பணத்தில் இலங்கை அரசின் (மகிந்த ஆட்சி) பங்கும் இருந்தது என்பதை அறிந்த பாப்பரசர் அப்பணத்தை பகிரங்கமாக பேராயரிடம் திருப்பிக் கொடுத்தமை ஊடகங்களில் பிரசித்தமான செய்தி. 

சர்வதேச நாடுகளின் தலையீட்டை இல்லாதொழிக்க இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென எப்போதும் வேண்டுகோள் விடுக்கும் பேராயர், ஈஸ்டர் தாக்குதலுக்கு கறுப்புக்கொடி ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது சிங்கள பௌத்தத்தின் உண்மை முகத்தை உலகுக்கு உணர்த்த உதவலாம். சிலவேளை, ஏப்ரல் 21க்கு முன்னர் கறுப்புக் கொடியை பேராயர் கைவிடவும் கூடும். 

எனினும், இலங்கையில் இனவாதத்துக்கு நிகராக மதவாதமும் தலைவிரித்துவிட்டது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தன்னை சிங்கள பௌத்த தலைவனென்றும், அதை வெளிப்படுத்த தான் ஒருபோதும்; தயங்கப் போவதில்லையென்றும் அறைகூவுகின்ற ஒருவர் நாட்டின் ஜனாதிபதி என்றால், இதுவென்ன... இன்னும் கனக்க வரும் என்று கூறாதிருக்க முடியவில்லை. 

No comments