அடங்க மறுக்கும் நிரோஸ்!



கூட்டமைப்பின் பெரும்பாலான உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் தாமுண்டு தமக்கான பட்டாவுண்டு.மனைவி பிள்ளைகளை ஏற்றிதிரிய அரச பிக்கப் உண்டு என வாழ்ந்துவருகின்ற போதும் வலி.கிழக்கு தவிசாளர் மட்டும் ஓய்ந்த பாடாக இல்லை.நாள் தோறும் சர்ச்சைகளை மக்கள் சார்ந்து எதிர்கொள்ளும் அவர் தற்போது புதிதாக நிலாவரை விவகாரத்தில் சிங்குண்டுள்ளார்.

நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் என்பவருக்கு இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த தை மாத இறுதியில் நிலாவரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இராணுவத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுபடமுயற்சித்தனர். அப்போது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளார் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அகழ்வுப் பணிகள் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட போது தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இருந்து தொடர் நடவடிக்கைகளுக்காக இன்று மாலை 2 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments