கோத்தா கதை:அச்சம் தருகின்றது!

 


இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அண்மையில் ஊடகங்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்தானது ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் சமிஞ்சையாக ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு  கருதுவதுடன் அது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

ஊடக சுதந்திரம் என்பது ஊடக உரிமையாளர்களின் சுதந்திரம் அல்ல  மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தி அறிக்கையிடுதல் தவறான செயற்பாடு என்ற ஜனாதிபதியின்  கூற்றுடன்  எமக்கு  எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

எனினும், ஜனாதிபதி குறிப்பிட்ட கூற்றின் படி ஏதோ  சில  ஊடக நிறுவனங்களை  குறிவைத்து குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனக் கருத்துக்களை தெரிவிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே   ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு இச்செயலை காண்கின்றது.

குறிப்பாக “அந்த விடயம் என்னிடம் நடக்காது. பாடம் பயில வேண்டுமாயின் பாடம் புகட்ட எனக்கு தெரியும். போர் காலங்களில் எமக்கு எதிராக பணியாற்றியவர்களும் இதில்  உள்ளதுடன் அவர்கள் மீள எழுந்துள்ளனர்” போன்ற சொல் பிரயோகங்கள் கடந்த காலங்களில் பொது ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ள நேரிட்ட இன்னும் தீர்க்கபாடாத குற்றங்களின் நினைவூட்டலாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்நிலைமை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக உரிமையாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் அச்சுறுத்துவதாகவும்,  இதன் மூலம் ஊடக சுதந்திரம் மற்றும் தகவல் தெரிவிக்கும் உரிமை மீறப்படுவதாகவும் ஊடக கூட்டணி நம்புகின்றது.எனவே, ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை தொடர்பான பிரச்சினைகளை உண்டாக்கும் இத்தகைய அணுகுமுறைகளிலிருந்து விலகி, அதற்கான சுயாதீனமான, சுதந்திரமான சூழலை உருவாக்குமாறு  ஊடக இயக்கங்களின்  கூட்டமைப்பு  கேட்டுள்ளது.


No comments