யாழ்.நகர் முடங்குகின்றது!

 


யாழ்.நகரப்பகுதியை இலக்கு வைத்து கொரோனா தொற்று முனைப்படைந்துள்ள நிலையில் நகரப்பகுதியை முடக்கும் வகையில் துரித நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் சகிதம் சுகாதாரத்துறை; ஆரம்பித்துள்ளது.

இன்றைய தினம் யாழ்.நகரில் எழுமாறாக 130 பொதுமக்களிடையே செய்யப்பட்ட பரிசோதனையில் ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும்  கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட செயலர் க.மகேசன் தலைமையில் நடைபெற்ற கொரோனா விசேட செயலணியின் அவசர கூட்டத்தில் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன.

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் எதிர்வரும் பத்து நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது.

தனியார் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட மூன்று பிரிவு தவிர்ந்த அனைத்து பிரிவுகளிற்கும் யாழ் மாவட்டத்தில் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments