60 ஜனாஸாக்கள் ஓட்டமாவடியை வந்தடையும்?


கொரோனா தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் 9 உடல்கள் நேற்று ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன.


இந்நிலையில், இன்றைய தினம் 60 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக ஓட்டமாவடியை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், இஸ்லாமியர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை ஓட்டமாவடி மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.


கொரோனா தொற்றால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து, பூநகரியின் இரணைதீவு உடல்கள் அடக்கம் செய்வதற்கான இடமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ் – முஸ்லிம் தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில், தொற்றால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய 10 ஏக்கர் காணியை ஓட்டமாவடி – சூடுபத்திரசேனை – மஜூமா நகரில் ஒதுக்கப்பட்டது.


மக்களும் ஓட்டமாவடி பிரதேச சபையும் இணைந்து இந்தக் காணியை வழங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இந்தக் காணியை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்து சென்றனர்.


இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 27 உடல்களை அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அடக்கம் செய்தவற்கான ஏற்பாடுகள் நேற்று தாமதமாகின. இதனால்,10 சடலங்களை அடக்கம் செய்வதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


முதலாவது உடல் மாலை 3 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. ஏறாவூரை சேர்ந்த ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டது.


இதேபோன்று காத்தான்குடியை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் இரண்டாவதாக அடக்கம் செய்யப்பட்டது. நேற்றிரவு 9 மணி வரை 9 உடல்களையே அடக்கம் செய்ய முடிந்தது.


பலத்த பாதுகாப்பு


ஓட்டமாவடியில் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை அடுத்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடக்கம் செய்யப்படுவதை பார்வையிடவும் இறுதிச் சடங்கில் அதிகளாவானோர் கூடுவதைத் தடுக்கவும் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.


அத்துடன் அப்பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.


முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண இராணுவத் தளபதி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் மட்டுமே குறித்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


இதனிடையே, இன்றைய தினம் தொற்றால் உயிரிழந்த 60 உடல்களை அடக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.


இதேவேளை, இஸ்லாமியர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக ஓட்டமாவடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


அத்துடன், புனித நாளான வெள்ளிக்கிழமை இந்த பாக்கியம் கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகவும். இந்நாள் எங்களின் பெருநாள் என்றும் இஸ்லாமிய மக்கள் தெரிவித்தனர்.


அத்துடன், உடல் அடக்கத்துக்கு அனுமதி அளித்தமைக்காக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் முஸ்லிம் சமூகத்தினர் கூறினர். 

No comments