இரணைதீவை விட்டுவிடுங்கள்!

 இரணைதீவையே ஒரு பாரிய புதைகுழியாக்காதீர்கள் என  நீதி, சமாதான ஆணைக்குழுவின் இயக்குநர் மங்களராஜா அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அண்மைக்கால வரலாற்றை நோக்கும்போது 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இரணைதீவில் ஏறக்குறைய 120 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் அனைவருமே றோமன் கத்தோலிக்க சமயத்தவர்கள். வடமாகாணத்திலேயே மிகவும் பின்தங்கிய, போக்குவரத்துச்சிரமமான, அடிப்படை வசதிகளே குறைவாக உள்ள இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சமூக மேம்பாடு ஆகியவற்றுக்காக ஆரம்பகாலம் முதல் பாடுபட்டு வருபவர்கள் யாழ் மறைமாவட்டத்தின் கத்தோலிக்கக்குருக்களும்  திருக்குடும்ப சபைக்கன்னியர்களுமாவர். பல்வேறு அரச திணைக்களங்களும், அரசு சாரா சமூக மேம்பாட்டு நிறுவனங்களும் இவ்வூரின் வளர்ச்சிக்கான திட்டங்களை இங்கு பணியாற்றும் குருக்கள் துறவியரின் அனுசரணையுடனேயே செய்து வந்துள்ளனர். 

1992ம் ஆண்டு இவ்வூரிலிருந்து குடிபெயர்ந்து பிரதான நிலப்பரப்பில் இரணைமாதா நகர் என்று பெயரிடப்பட்ட இடத்தில் குடியேறிய மக்கள் இன்னும் முழுமையாகத்தமது பூர்வீக பூமிக்குச் செல்லவில்லை. 2017ம் ஆண்டிலிருந்து இவர்கள் அங்கு சென்று தற்காலிகமாகத்தங்கிப்பணியாற்ற அனுமதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். தற்போது இங்கு 112 குடும்பங்கள் தங்கித்தொழில் புரிந்து வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் இதர வசதிகள் இன்னும் இங்கு இல்லாத காரணத்தால் எஞ்சிய குடும்ப அங்கத்தவர்களும் குடும்பத்தினரும் அடங்கலாக ஏறக்குறைய 250 குடும்பத்தினர் இரணைமாதா நகரிலேயே தங்கியுள்ளனர். இவர்களும் கல்வியுட்பட மற்றும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுமிடத்து இரணைதீவுக்கே செல்ல ஆவலாயுள்ளனர்.

இந்தப்பின்னணியில் இரணைதீவில் கொரோணாத்தொற்றால் இருக்கும் முஸ்லீம் மக்களின் உடல்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய அரசு எடுத்த அதிரடி, சர்வாதிகார முடிவு ஏற்றுக்கொள்ள முடியாததும், கண்டிக்கத்தக்கதும் என்பதைச்சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இது போன்ற முடிவை எடுக்கமுன் முதன்முதலாக இம்மக்களின் தலைவர்களிடமும் தொடக்க காலம் முதல் இம்மக்களின் மேம்பாட்டுக்காக  இவர்களுடன் இருந்து உழைக்கும் கத்தோலிக்கக்குருக்களிடமும், அதற்கு மேலாக அவர்களுக்குப்பொறுப்பான யாழ் மறைமாவட்ட ஆயரிடமும் கேட்டிருக்க வேண்டும். அத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவ்விடத்திற்குப் பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டிருக்கவேண்டும். இவற்றுள் எதையும் செய்யாது திடீரென்று அரசு தனது முடிவை அறிவித்திருப்பது ஜனநாயக விரோதமானதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

100% கத்தோலிக்கர் வாழும் இப்பிரதேசத்தின் முஸ்ஸீம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதை முஸ்லீம் மக்களே எதிர்க்கின்றனர் என்பது முஸ்லீம் தலைவர்கள் வெளியிடும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது.

இரணைதீவில் 100% கத்தோலிக்கரே வாழ்வதால் கத்தோலிக்க வழிபாட்டிடங்களேயுள்ளன. இங்குள்ள பிரதான ஆலயம் புனித மரியாள் ஆலயம்(அண்மையில் கடற்படையினரால் புனரமைக்கப்பட்டது.) இங்கு இப்போது வலைப்பாட்டுப்பங்குத்தந்தையால் வழிபாடுகள் நடாத்தப்படுகின்றன. அத்துடன் தீவின் பல்வேறு இடங்களில் புனித செபஸ்ரியார் பெயரிலும், புனித அந்தோனியார் பெயரிலும் சிற்றாலயங்களும் லூர்து மாதா பெயரில் ஒரு கெபியும் உள்ளது. வேறு சமயத்தவர் யாராவது சிறு குழுக்களாக இங்கிருந்தாலும் அவர்கள் தமது வழிபாட்டிடங்களை அமைப்பதை யாரும் தடைசெய்ய முடியாது. இவ்வேளையில் முஸ்லீம்கள் எவரும் இல்லாதபோது அவர்களது மையவாடியை இங்கு கொண்டுவந்து அமைப்பது முற்றிலும் பொருத்தமற்றதும், எந்த அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும். 


இம்மக்கள் மீன்பிடியிலும் மற்றும் அரசுக்குப்பாரிய வெளிநாட்டுச்செலவாணியை ஈட்டும் கடலட்டை அறுவடைப்பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். இப்பகுதியில் கடற்றொழில் அமைச்சின் அனுசரனையடன் பாரிய கடலட்டைப்பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரணைதீவு முழுவதும் வருங்காலத்தில் ஒரு பாரிய புதைகுழியாக மாற்றும் சந்தர்ப்பத்தில் இம்மக்கள் தமது தொழிலைக்கைவிடவும் வாய்ப்புள்ளது. இதனால் தான் கடற்றொழிலமைச்சர் கௌரவ டக்லஸ் தேவானந்தா அரசின் இந்த முடிவு ஏற்ப்புடையதன்று என்று சுட்டிக்காட்டுகின்றார். 

அரசின் இந்த முடிவுக்குப்பின்னர் உள்ள பல்வேறு அரசியல் மற்றும் வேறு காரணங்களை  ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டியள்ளனர். எனவே அவற்றுக்குள் நாம் செல்ல விரும்பவில்லை

அரசின் இந்த முடிவை 100மூ கத்தோலிக்கரான இப்பகுதி மக்கள் சார்பில் யாழ் மறைமாவட்டக்கத்தோலிக்கர் அனைவரும் வன்மையாக எதிர்க்கின்றோம்  என்பதைப் பதிவு செய்ய விரும்புகின்றோம் எனவும் மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்.


No comments