உருவாகும் மாற்றத்தை எவ்வாறு தக்க வைப்பது? பனங்காட்டான்

இலங்கை அரசியலில் எதிர்பார்த்த குழப்பங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆளும் தரப்புக்குள் கழுத்தறுப்பு மோதலும் தலைதூக்கியுள்ளது. மகிந்தவின் பிரதமர் பதவிக்கு பொறி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை தமிழர் தரப்பு எவ்வாறு தங்களுக்காக்கலாம்? பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் எழுச்சி தரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலைக் களமாக முள்ளிவாய்க்கால் அமைந்தது. இதன் பிரதிபலிப்பாக, தமிழ் பேசும் இரு இனங்களும் இணைந்து எழுந்த மிகப்பெரும் எழுச்சியாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (பி2பி) அமைந்தது. 

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதற்கமைய இந்தப் பேரணி தன்னெழுச்சியாக உருக்கொண்டது. இந்த மாதம் 3ம் திகதி முதல் 7ம் திகதி வரையான ஐந்து நாட்களின் நிகழ்வுகளும் இதற்கான சாட்சி. 

சர்வ அதிகார சிங்கள பௌத்த இயந்திரம் இந்தப் பேரணியை முளையிலேயே கருவறுக்க முனைந்தது. நீதிமன்றத் தடை, வீதித்தடை, பொலிசாரும் இராணுவமும் ஆயுதபாணிகளாக முனைப்புக் காட்டிய தடையென்று வழிநெடுகலும் அதனை முறியடிக்க முயற்சி எடுக்கப்பட்டது. 

வடக்கு கிழக்கின் குடிசார் சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளின் பற்றின்றி முன்னெடுத்த பேரணியில், தமிழ் பேசும் சமூகத்தவர் அனைவரும் மதங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் ஆன்மிகவாதிகள், பொதுமக்கள், மாணவ சமூகம், அரசியல் பிரதிநிதிகள் என இணைந்து களமிறங்கியதால் சகல தடைகளும் தகர்க்கப்பட்டன. சிறப்பாக தமிழர் தாயக பல்கலைக்கழக மாணவர்களின் தோழமையுடன் கூடிய உணர்வுபூர்வமான பங்கெடுப்பு வரலாறு படைத்தது. 

இப்பேரணி உருவாக்கியுள்ள ஒற்றுமை, இது ஏற்படுத்தியுள்ள தாக்கம், இதன் அடுத்த கட்டம் என்பவை பற்றி சுட்டுவதற்கு முன்னராக, தெற்கில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுவரும் சில நிகழ்வுகளை நோக்குவது அவசிமானது. 

முதலாவது - தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு நீண்ட நாட்களாக கேட்டு வந்தனர். மனோ கணேசன் அமைச்சராகவிருந்த நல்லாட்சி அரசாங்கம்கூட இதனைக் கவனிக்கவில்லை. 

தற்போது, தொண்டமானின் பூட்டனாரான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நான்கு வகை உத்திகளையும் பயன்படுத்தி காரியத்தை முடித்துள்ளது. எனினும் ஒரு சறுக்கல் இங்கே காணப்படுகிறது. நாளாந்த சம்பளமாக 900 ரூபாவும், சிறப்புப் படியாக நூறு ரூபாவும் வழங்க முடிவாகியுள்ளது. வேலை நாட்கள் சுமார் பதினைந்தாக குறைக்கப்படுமாம். 

கட்டிப்போட்டு அடிப்பதும், அடித்துப் போட்டு கட்டுவதும் ஒன்றுதான் என்பது அரசியலிலும் தெரிகிறது. 

இரண்டாவது - கொரோனா காலத்தில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் விவகாரம். சுகாதார கட்டுப்பாடுகளை காரணம் காட்டி ஜனாசா நல்லடக்கம் மறுக்கப்பட்டு தகனம் செய்யப்படுகின்றன. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாசாக்கள் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். 

இந்தப் பதிலால் முஸ்லிம் சமூகம் குளிர்ச்சி அடைந்தது. அமெரிக்க, பிரித்தானிய நாடுகளின் ராஜதந்திரிகளும் பாராட்டுத் தெரிவித்தனர். 

ஆனால், நடந்தது எதிர்மாறானது. அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறவில்லையென அவரது அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்து அனைவர் முகத்திலும் சாணகம் அடித்தது. அனுமதி வழங்கப்படும் என்பதை, அனுமதி வழங்கப்பட்டதாக பலரும் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட கவலைக்குரிய சமாசாரம் இது. 

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வும், முஸ்லிம்களின் ஜனாசா நல்லடக்கமும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் பதினான்கு கோரிக்கைகளில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடப்பட வேண்டியது. 

மூன்றாவது - ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை கோதபாயவிடம் இந்த வாரம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை ஜனாதிபதி இன்னமும் ஏனோ பகிரங்கப்படுத்தவில்லை. நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கவில்லை. 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முழுமையான இறுதி அறிக்கையை தமக்குத் தருமாறு பேராயர் கர்திலால் மல்கம் ரஞ்சித் கோதபாயவிடம் கேட்டுள்ளார். இதுவரை மௌனமே பதில். 

ஜெனிவாவில் போர்க்குற்ற சர்வதேச விசாரணை விவகாரத்துடன் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையும் சேர்ந்துவிடலாம் என்ற சந்தேகம் அரசுக்கு உண்டு. 

நான்காவது - பொதுஜன பெரமுனவுக்குள் முன்னாள் ஜே.வி.பி.காரரான விமல் வீரவன்ச பிரச்சனையொன்றை கிளப்பியுள்ளார். பெரமுனவின் தலைவர் பதவி கோதபாயவிடம் கையளிக்கப்பட வேண்டுமென்பது இவரது கோரிக்கை. 

பொதுஜன பெரமுனவின் தலைவராக இருப்பவர் மகிந்த ராஜபக்ச. இதன் பிரதான அமைப்பாளர் பசில் ராஜபக்ச. கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியானவர் கோதபாய ராஜபக்ச. 

இலங்கை அரசியல் கட்சிகளின் வழமைப்படி நாட்டின் உயர்தலைவராக - அதாவது ஜனாதிபதியாக பதவி ஏற்பவர் அந்தக் கட்சியின் தலைவராவது நியமமாக அமைந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகா, மகிந்த, மைத்திரி ஆகியோர் ஜனாதிபதிகளாக பதவியேற்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் கட்சிகளின் தலைவர்களாக அவர்களே அமைந்தனர். அந்த வழமையின் பிரகாரம் இப்போதைய ஜனாதிபதி கோதபாய பெரமுனவின் தலைவராக வேண்டுமென்பது விமல் வீரவன்சவின் கோரிக்கை. 

நியாயமான இந்தக் கோரிக்கை நிறைவேறுமானால் மகிந்த பதவியிழப்பார். அவர் பதவியைத் துறக்க தவறினால், அவர் அவராகவே பதவியிலிருந்து விலகிச் செல்லக்கூடிய சூழலை கோதபாய அணி உருவாக்கக்கூடும். 

எதிர்பார்த்த உட்கட்சிப் பூசல்களும், எதிர்பார்க்காத புறச்சூழல் நிகழ்வுகளும் சிங்கள தேசத்தில் உருவாகியிருக்கும் சூழலில், தமிழர் தாயகத்தில் வெற்றி கொண்ட எழுச்சிப் பேரணி இனி எதனைச் சாதிக்கப் போகிறது என்ற கேள்வி எழுகின்றது. 

கடந்த காலங்களில் ஒன்றுபட முடியாதிருந்த தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மட்டுமன்றி சர்வமத தலைவர்களும், தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட அரசியல் பிரமுகர்களும், மாணவர் சமூகமும் இரண்டற இணைந்ததை பேரணி எடுத்துக்காட்டியது. இந்தப் பேரணியால் எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லையென்று அரசதரப்பு கூறினாலும், அவர்கள் உள்மனது அப்படி எண்ணவில்லை. 

அதேசமயம் தமிழ் அரசியல் தலைமைகளுக்குள் ஏற்பட்டுள்ள இணைப்பு நிரந்தரமாகும் வாய்ப்பு காணப்படவில்லையென்பதையும் ஊடக அறிக்கைகள் வாயிலாக அவதானிக்க முடிகிறது. பேரணியின்போது ஆங்காங்கே சில சலசலப்புகள் தோன்றின. குறிப்பிட்ட ஒரு கட்சியினர் இதனைத் தங்களுடையதாக்க முனைந்தபோது அது தடுக்கப்பட்டது.

திருமலையில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பிறந்த நாளான பெப்ரவரி ஐந்தாம் திகதி பேரணியைத் திசைதிருப்பி, பிறந்த நாள் நிகழ்வாக மாற்ற எடுத்த முனைப்பு நாகரிகமாக முறியடிக்கப்பட்டது. 

பொலிகண்டியில் இறுதி நிகழ்வின்போது ஒரு கட்சிசார் பிரமுகர்கள் மேடையேறி அதனை முடித்து வைக்க எடுத்த நடவடிக்கையை குடிசார் சமூகம் சார்பில் முன்னகர்த்திய ஆன்மிகவாதிகள் வேலன் சுவாமிகளும், லியோ ஆம்ஸ்ட்ரோங் அடிகளாரும் சாதுரியமாகக் கையாண்டு பிரகடனத்தை வாசித்து நிறைவேற்றி வைத்தனர். 

சில கட்சிப் பிரமுகர்கள் படம் காட்டுவதிலும், அவ்வப்போது உரையாற்றுவதிலும் காட்டிய கவனம் பின்பகுதியில் தவிர்க்கப்பட்டு குடிசார் அமைப்புகளின் மக்கள் அதனை மாற்றி வெற்றி கண்டனர். 

கூட்டமைப்பின் சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரப்படையை கோதபாய அரசு நீக்கியுள்ளது. இப்பேரணியில் அவர் பங்குபற்றியதே இதற்குக் காரணமென பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளர்களாக கூட்டமைப்பு இருந்தபோது சுமந்திரனின் உயிருக்கு அச்சமென்று கூறி இந்த விசேட பாதுகாப்பு அவர் கேட்காமலே மைத்திரி - ரணில் தரப்பால் வழங்கப்பட்டது. இப்போது அந்த அச்சம் அவருக்கில்லை என்று காரணம் கூறி நீக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக இவ்வாறான பேரணிகளில் ஈடுபடுகையில் சில எதிர்விளைவுகள் ஏற்படுவதுண்டு. இது எதேச்சார அரசுகளுக்கு கைவந்த கலை. காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம், யாழ். கச்சேரி சத்தியாக்கிரகம் போன்றவைகளின்போது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீது அரசாங்க படையினர் குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டதும் பலர் காயமுற்றதும் வரலாறு. 

ஒரு பேரணி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இது ஒன்றுதான் குடிசார் சமூகத்தின் இலக்கா? அப்படியிருக்க முடியாது. இதனை அடுத்தடுத்த தளங்களுக்கு தாமதமின்றி எடுத்துச் செல்ல வேண்டும். உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர் சமூகம் முழுமையாக இதற்குப் பங்களிக்க வேண்டும். 

இதற்கான இன்னும் பல இணைப்புகள் அங்கும் இங்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். சரியான திட்டமிடலின் கீழ் செல்நெறிப்பாதை வரையப்பட வேண்டும். இதற்கென வெவ்வேறு குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் தேசியத்தின் பெயரில் இயங்கும் அரசியல் பிரமுகர்களை அங்கிங்கு செல்லவிடாது, நெருங்கியிருந்து கண்காணித்து அவர்களையும் அணைத்தவாறு அடுத்த படிகளுக்கு நகர வேண்டும்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி உருவாக்கிய மாற்றத்தை தக்க வைப்பதற்கான நடைமுறைத் திட்டத்தை (ஓய்வு கொடுக்காது) செயற்படுத்த வேண்டும். திட்டமிடலும் திட்டச் செயற்பாடும் கைகோர்த்து இயங்க வேண்டும். இனவாத இராச்சியத்துக்கு சர்வதேச உதவியுடன் முடிவு கட்ட குடிசார் தமிழ் சமூகம் பயணிக்க வேண்டிய பாதை நீளமானது - மிகமிக நீளமானது!

No comments