ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைப் பெண்ணை அடிமையாக நடத்திய விவகாரம்: மீண்டும் விசாரணை


ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலி தம்பதியர் மீதான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக ஆஸ்திரேலியர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

குறித்த தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த இப்பெண்ணுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அவரை தமிழ்நாட்டிற்கு திரும்பிச்செல்ல அனுமதிக்காமல் தமது வீட்டில் தொடர்ந்தும் அடிமைபோல வைத்திருந்தார்கள் எனவும்  குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஆஸ்திரேலிய தம்பதியர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு தடவைகள் ஆஸ்திரேலியா வந்து தங்கியிருந்துவிட்டு திரும்பிய இப்பெண் 2007ம் ஆண்டு இங்கு வந்ததன் பின்னர் வீடுதிரும்ப அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. அவரது சுற்றுலா விசா காலாவதியாகி விட்டதாக சொல்லப்படுகின்றது.  

இதுதொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் அடுத்தகட்ட விசாரணை மீண்டும் ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.

அத்தமிழ் பெண்ணை அடிமையாக வைத்திருக்கவில்லை, இவை அனைத்தும் தமக்கு எதிராக புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளே என ஆஸ்திரேலிய தம்பதியினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

தமது கட்சிக்காரரின் நெருங்கிய குடும்ப அங்கத்தவராகவே அப்பெண் நடத்தப்பட்டதாக கூறும் அத்தம்பதியரின் வழக்கறிஞர், வீட்டினர் அனைவரும் அவரை 'அம்மாச்சி' என்று அன்பாகவே அழைத்துவந்ததாக வீட்டு வேலைகளில் உதவிபுரிந்து வந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். 

'அடிமை’யாக நடத்தப்பட்டதாக எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும் இதற்கேற்றாற்போல் சம்பவங்களும் மிகைப்படுத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள அவ்வழக்கறிஞர், குறித்த பெண்ணுக்கு வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கம் தமது கட்சிக்காரருக்கு கிடையாது எனக் கூறியிருக்கிறார்.

கடந்த வாரம் தொடங்கிய இவ்வழக்கு விசாரணை சுமார் 6 வாரங்கள் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments