கோத்தா கூட்டாளிக்கும் சர்வதேச நீதிமன்றம் தேவையாம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சர்வதேச நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்கு அவர் இந்த எச்சரிக்கையை இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றின் வாயிலாக விடுத்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நாட்டில் உரிய முறையில் சட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் சர்வதேச நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியொன்றை தாம் கோரிய போதிலும், இதுவரையில் தனது கைகளுக்கு அந்த அறிக்கை கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தாதவர்கள் பற்றி மட்டும் விசாரணை நடத்தாது, தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட அனைவர் தொடர்பிலும் விசாரணை நடாத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி விசாரணைக்குழுவிடம் தாம் கோரிக்கை முன்வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் ஏன் நடத்தப்பட்டது ,யார் நடத்தினார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள தயாரில்லை எனவும், அரசாங்கமும், ஆணைக்குழுவும் நீதியை நிலை நாட்டத் தவறினால் வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதி நிலை நாட்டப்படாவிட்டால் சர்வதேச அமைப்புக்களின் ஊடாக நீதியை நிலை நாட்டுவதற்கு முயற்சிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் தமக்கு திருப்தி கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் பேராயர் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments