மியன்மாரைப் போன்று இலங்கையிலும் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம்! பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை


மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கியநாடுகள் சபை தொடங்கி உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ள இந்த ஜனநாயகப் படுகொலையை இலங்கை மக்கள் தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

விழித்துக்கொள்ளாவிடில் மியன்மாரைப் போன்று இலங்கையிலும் விரைவில் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறியுள்ளமை தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

பௌத்தம் பெரும்பான்மையாக உள்ள மியன்மாரில் இராணுவத்தால் சிறுபான்மையினராகிய ரோஹிங்கியா முஸ்லீம்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த இனவழிப்புத் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டில் மியன்மார் சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி அம்மையாரின் வெற்றி இந்தப் புலனாய்வுப் பொறிமுறைக்கு இடங்கொடுக்கும் என்று அஞ்சியே நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆதரவுடன் போட்டியிட்ட கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இராணுவம் சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

முள்ளிவாய்க்காலில் தாங்கள் நிகழ்த்திய தமிழின அழிப்புக்கு எதிரான கத்தி தங்கள் தலைக்கு மேல் எந்நேரமும் தொங்கிக்கொண்டிருப்பதை ராஜபக்க்ஷ சகோதரர்கள் நன்கு அறிவார்கள். இதனாலேயே, மீளவும் ஆட்சி பீடம் ஏறியதும் முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்த ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இப்போது, மனித உரிமைகள் பேரவை ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் நிலையில் பேரவையின் ஆணையாளர் இவ்விவகாரம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படல் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன் குற்றம் நிரூபிக்கப்படுமிடத்து அதற்கான தண்டனைகள் குறித்தும் பேசி வருகின்றார். 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் ஜனாதிபதி ஆனவுடன் சிவில் நிர்வாகத்தைப் படிப்படியாக இராணுவமயப்படுத்தி வருகின்றார். தனது முன்னாள் இராணுவ சகாக்களை சிவில் நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளாக நியமித்து வருகிறார். இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்து சர்வதேசரீதியாகப் பலம்பெற்று வரும் நிலையில், அதிலிருந்து தப்புவதற்காக, எதனையுமே இராணுவ ரீதியான மனோநிலையுடன் அணுகும் ஜனாதிபதி முற்றுமுழுதான இராணுவ ஆட்சிக்குள் பிரவேசிக்க மாட்டார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. நடைபெற்றது தமிழினப் படுகொலையாயினும் அதன் பொருட்டு இலங்கையில் இராணுவம் மேலாதிக்கம் பெறுவது சிங்கள தேசத்துக்கும் உகந்தது இல்லை என்பதைச் சிங்கள மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

No comments